மத்திய அரசுக்கு ஆதரவு 273 ஆனது-எதிர்ப்பு 266!

இன்று பிற்பகல் நிலவரப்படி ஆதரவு எம்.பிக்களின் எண்ணிக்கை 273 ஆகவும், எதிர் அணியினரின் எண்ணிக்கை 266 ஆகவும் உள்ளது.
இதுவரை தனது நிலையை அறிவிக்காமல் இருந்து வந்த தேசிய மாநாட்டுக் கட்சி இன்று தனது நிலையை அறிவித்தது. மதவாத சக்திகளை தேசிய மாநாட்டுக் கட்சி ஆதரிக்காது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம் என அக்கட்சியின் தலைவர் ஓமர் அப்துல்லா முறைப்படி அறிவித்தார்.
இதையடுத்து பெரும்பான்மை பலத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எட்டியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெல்ல முடியும் எனவும் அது நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆதரவு எம்.பிக்களின் எண்ணிக்கையும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதப்பி விடும் என்பதையே உறுதிப்படுத்துகிறது.
தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் அணியில் காங்கிரஸ் கட்சிக்கு 152 பேரும், கூட்டணிக் கட்சிகளுக்கு 71 பேரும், சமாஜ்வாடி கட்சிக்கு 35 பேரும், மற்றவர்கள் 15 எம்பிக்களும் உள்ளனர். மொத்த எம்.பிக்களின் எண்ணிக்கை 273 ஆக உயர்ந்துள்ளது.
மாறாக எதிர் அணி தரப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 165 பேரும், இடதுசாரிகளுக்கு 60 பேரும், பகுஜன் சமாஜ்கட்சிக்கு 17 பேரும், மற்றவர்கள் 24 பேரும் உள்ளனர். இவர்களது மொத்த எண்ணிக்கை 266 ஆகும்.
இதுதவிர அரசுக்கு ஆதரவாக 11 எம்.பிக்கள் நடுநிலை வகிக்கக் கூடும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் 6 பேர் பாஜகவினர். மற்றவர்கள் ஐக்கிய ஜனதாதளம், பிஜூ ஜனதாதளம், சிவசேனையைச் சேர்ந்த அதிருப்தியாளர்கள். மம்தாவும் நடுநிலை வகிக்கப் போவதாக கூறியுள்ளார்.
மேலும் சீக்கியரான பிரதமருக்கு எதிராக வாக்களிக்க சில அகாலிதளம் எம்பிக்களும் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் ஆதரவாகவோ அல்லது வாக்களிப்பை புறக்கணிக்கவோ செய்யலாம்.
எனவே வாக்கெடுப்பில் வெல்வோம் என்ற நம்பிக்கை ஆளுங் கூட்டணிக்கு ஏற்பட்டுள்ளது.
பரூக் அப்துல்லாவின் ஆதரவைப் பெறுவதில் ராகுல் காந்தியின் பங்கு மிக அதிகம். இவர் தான் பரூக்கின் மகன் ஒமர் அப்துல்லாவிடம் பேச்சு நடத்தி வந்தார். இந் நிலையில் இன்று இந்த ஆதரவு கிடைத்துவிட்டது.












Click it and Unblock the Notifications