தர்மபுரி: கோவில் கட்டினால் பெரியார் சிலை-தி.க
தர்மபுரி: தருமபுரியில் உள்ள அரசு தீயணைப்புத்துறை மற்றும் மீட்புத்துறை வளாகத்திற்குள் கோயில் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அங்கு பெரியார் சிலையை வைப்போம் என்று மாவட்ட கலெக்டருக்கு தி.க.வினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து திராவிட கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது:
தருமபுரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலக வளாகத்திற்குள் சுமார் அரை ஏக்கர் நிலத்தில் ஏற்கனவே 13 கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. தற்போது 14ஆவது கோயிலை அதிகாரிகளின் துணையோடு சிலர் கட்டி வருகின்றனர்.
மதச் சார்பற்ற நாட்டில் அரசு அலுவலகத்திற்கு சொந்தமான இடத்தில் இந்து மதத்திற்கு என பல லட்ச ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை வீணடித்து அதிகாரிகள் துணையோடு கோயிலை சிலர் கட்டி வருவது கண்டனத்திற்குரியதாகும்.
இது போன்ற அரசு இடங்களில் கோயில்கள் கட்டுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
விதியை மீறி தீயணைப்புத் துறை அலுவலகத்திற்குள் கட்டப்பட்டிருக்கும் கோயில்களை அகற்றுவதோடு, கட்டிவரும் வரும் கோயில் கட்டுமானப் பணிகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
இதற்குத் துணை போகும் தீயணைப்புத் துறை அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தீயணைப்புத்துறை வளாகத்திற்குள் தந்தை பெரியார் சிலையை வைப்போம் என தி.கவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பிரச்சனை குறித்து தீயணைப்புத்துறை அலுவலர் உரிய விளக்கம் அளிக்க மாவட்ட கலெக்டர் ஆணை பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications