அலி அப்துல்லாவின் சிறை அறையில் ரெய்ட்

பெங்களூர், அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் முக்கியமான நகரங்களான சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட நகரங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
4 பேர் கைது:
தமிழகத்தில் சதி வேலைகள் நடக்கக்கூடும் என மத்திய உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து அதிரடியாக உஷார்படுத்தப்பட்ட காவல்துறை, அனைவரும் வியக்கும் வகையில் நான்கு தீவிரவாதிகளைப் பிடித்து தமிழகத்தின் பெருநகரங்களை பேராபத்திலிருந்து காத்துள்ளது.
நெல்லையில் அப்துல் கபூர், முகமது அன்வர் பாதுஷா, சென்னையில், ஹீரா மற்றும் அபுதாஹிர் ஆகியோர் சிக்கியுள்ளனர். இவர்களுக்கு எங்கெல்லாம் தாக்குதல் நடத்தலாம், எப்படியெல்லாம் நடத்தலாம் என்று புழல் சிறையில் இருந்தபடி ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்துள்ளார் அலி அப்துல்லா.
அப்துல் கபூர், லஷ்கர் இ தொய்பா இயக்க ஆதரவாளரான முகமது அன்வர் பாதுஷா ஆகியோரை நெல்லை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மற்றும் சென்னையில் பெரும் நாச வேலைகளை ஏற்படுத்த இவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
அப்துல் கபூர் தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர். கடந்த 10 வருடங்களாக சென்னையில் உள்ள ஒரு செருப்புக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
அவரது நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமாக இருந்ததால் அவரை தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் அமைப்பு சில காலத்துக்கு முன்பே அவரை இயக்கத்திலிருந்து வெளியேற்றிவிட்டது.
சதி நாயகன் அலி அப்துல்லா:
இந்த திட்டத்தை அப்துல் கபூர் தீட்டவில்லை. மாறாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜிஹாத் கமிட்டி என்ற அமைப்பைச் சேர்ந்த அலி அப்துல்லாதான் இந்தத் திட்டத்தை தீட்டியுள்ளார். பிறகு அவர் கபூரிடம் வெடிகுண்டுகளையும், டைமர்களையும் தயாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதன் பேரில் கபூர் அவற்றை தயாரித்துள்ளார். அப்போதுதான் நெல்லை போலீஸாரிடம் சிக்கிக் கொண்டார். அலி அப்துல்லா மீது கொலை, குண்டுவெடிப்பு உள்பட 8 வழக்குககள் நிலுவையில் உள்ளன என போலீசார் தெரிவித்தனர்.
அப்துல் கபூர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அன்வர் பாதுஷாவை போலீசார் சுற்றி வளைத்தனர். கபூரிடம் இருந்த வரைபடங்கள், சதி வேலைத் திட்டங்களின் நகல்கள் அன்வர் பாதுஷாவிடமும் இருந்தன. இவர்களின் கூட்டாளிகள் மேலும் 16 பேர் தப்பிவிட்டனர். அவர்களையும் வலைவீசித் தேடி வருகின்றனர் போலீசார்.
இதேபோல சென்னையில் அபுதாஹிர் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மண்ணடியில் ஹீரா என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
அலி அப்துல்லா யார்?
அலி அப்துல் கொறடாச்சேரியைச் ேசர்ந்தவர். இவருடைய உறவினர்கள், நண்பர்கள் பலர் பயங்கரவாத செயல்களில் நிபுணர்கள் ஆவர். இவருடைய நெருங்கிய உறவினரான ஏர்வாடி காசிம், இஸ்லாமிய பாதுகாப்புப் படை என்ற அமைப்பின் தலைவர் ஆவார்.
இமாம் அலிக்கு மிக நெருங்கிய நண்பர் அலி அப்துல்லா. பலமுறை பாகிஸ்தானுக்குச் சென்று பயங்கரவாத பயிற்சிகளைப் பெற்றுள்ளார். ஜிஹாத் கமிட்டியின் தலைவராக செயல்பட்டு வருகிறார் அப்துல்லா. இந்த அமைப்பு தடை செய்யப்பட்டதாகும்.
துணி வியாபாரம் டூ தீவிரவாதம்:
சென்னை அருகே பல்லாவரத்தில் துணிக் கடை ஒன்றை முன்பு நடத்தி வந்தார். பின்னர் ஜவுளி வியாபாரத்தை விட்டு விட்டு தீவிரவாதத்திற்கு மாறினார்.
1996ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாண்டியன் எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரயில்களில் குண்டுவெடித்தது. இந்த சம்பவங்களில் அப்துல்லாவுக்கு முக்கியப் பங்கு இருந்ததுத
சென்னையில் கே.கே.நகர் பகுதி இமாமைக் கொன்ற வழக்கில் சிக்கிய அப்துல்லாவுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. பின்னர் அதிலிருந்து விடுதலை ஆனார்.
இவர் மீது மொத்தமாக 8 வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளில்தான் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அலி அப்துல்லா.
இந்த நிலையில்தான் தமிழகத்தில் பெரும் நாச வேலைகளை ஏற்படுத்த திட்டம் தீட்டியிருந்தார்.
சிம்கார்டை கடித்து துப்பினார்:
இவரது சதித் திட்டம் தெரிய வந்ததைத் தொடர்ந்து புழல்சிறையில் அப்துல்லா அடைக்கப்பட்டுள்ள அறையில் போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது மறைத்து வைத்திருந்த இரு செல்போன்களின் சிம் கார்டுகளையும் வாயில் போட்டுக் கடித்து துப்பி விட்டாராம் அப்துல்லா.
இதனால் சிம் கார்டுகளை போலீஸாரால் மீட்க முடியாமல் போய் விட்டது. அவரை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications