மைசூரில் வெடிகுண்டு தொழிற்சாலை கண்டுபிடிப்பு - மதுரைக்கு சப்ளை
{image-Mysore map2500_30072008.jpg tamil.oneindia.com}மைசூர்: மைசூர் அருகே மிகப் பெரிய அளவில் வெடிகுண்டு தயாரிப்புத் தொழிற்சாலை இயங்கி வந்ததை கர்நாடக போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு இங்கிருந்துதான் வெடிகுண்டுகளும், அதற்கான மூலப் பொருட்களும் சப்ளை ஆகியுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூர், அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்புகளால் நாடே அல்லோகலப்பட்டிருக்கும் நிலையில் சூரத்தில் நேற்று அடுத்தடுத்து 18 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல ராஜஸ்தானிலும் 3 வெடிகுண்டுகள் சிக்கின. மணிப்பூரிலும் மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு சிக்கியது.
இந்த நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் வெடிகுண்டுகளை சப்ளை செய்த வெடிகுண்டுத் தயாரிப்புத் தொழிற்சாலையை கர்நாடக போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
மைசூர், மேட்டஹள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள இந்த தொழிற்சாலை படு ரகசியமாக செயல்பட்டு வந்துள்ளது. மிகப் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் நேற்று இரவு மைசூர் போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தினர்.
அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுத் தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருட்களைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சி அடைந்து விட்டனர். அவற்றைப் பயன்படுத்தி ஏராளமான வெடிகுண்டுகளைத் தயாரிக்க முடியும்.
இந்த தொழிற்சாலையிலிருந்துதான் மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு வெடிகுண்டுகள் சப்ளை ஆகியுள்ளன. பெங்களூர் தொடர் வெடிகுண்டு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளும் கூட இங்கிருந்துதான் போயிருக்கலாமோ என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
இந்த தொழிற்சாலையிலிருந்து 12 பேரல் நைட்ரிக் அமிலம், 20 பை மெக்னீஷியம் பவுடர், 10 டன் பொட்டாஷ் உரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து தொழிற்சாலைக்கு சீல் வைத்த போலீஸார் அதன் உரிமையாளர் சந்துருவைக் கைது செய்தனர். இந்தப் பொருட்களை சிவகாசிக்கு பட்டாசு தயாரிக்க அனுப்பி வருவதாக சந்துரு போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் இவற்றை வைத்து வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு வருவதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்துருவை ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிரவாத மையமாகும் மைசூர்?
எழில்மிகு சுற்றுலா நகரான மைசூர் தற்போது வெடிகுண்டு தயாரிப்பு மையமாகவும், தீவிரவாத மையமாகவும் மாறி வருவதை சமீபத்திய சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை தொடர் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளும், அதற்குத் தேவையான வெடிபொருட்களும் மைசூரிலிருந்தே வரவழைக்கப்பட்டன என்பது நினைவிருக்கலாம்.
சில மாதங்களுக்கு முன்பு மைசூர் அருகே பதுங்கியிருந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிலர் வளைத்துப் பிடிக்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
நெல்லையில் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட தீவிரவாதி அப்துல் கபூர், சென்னை, நெல்லையில் நாச வேலையில் ஈடுபட சதித் திட்டம் தீட்டியிருந்ததாகவும், அதற்கான வெடிபொருள் பெங்களூரிலிருந்து தங்களுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் போலீஸாரிடம் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
வெடிபொருளுக்காக காத்திருந்தபோதுதான் அவர் போலீஸாரிடம் பிடிபட்டு விட்டார். இந்த வெடிபொருள் சந்துருவின் ஆலையிலிருந்தே வந்திருக்க வேண்டும் என தெரிகிறது.
எனவே மைசூர் தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக மாறி வருவதாக போலீஸார் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications