குண்டுவெடிப்பு: சுஷ்மா கருத்து-பாஜக 'டென்சன்'
டெல்லி: அகமதாபாத் மற்றும் பெங்களூரில் மத்திய அரசே குண்டுவெடிப்புகளை நடத்தியதாக பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்த கருத்தை பாஜகவே நிராகரித்துள்ளது. இதில் எந்த சதியும் இல்லை என்று அது தற்போது விளக்கியுள்ளது.
பெங்களூர், அகமதாபாத் குண்டுவெடிப்புகள் குறித்து பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையில், நம்பிக்கை வாக்கெடுப்பில், எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தை மூடி மறைப்பதற்காக காங்கிரஸே திட்டமிட்டு நடத்திய சதிதான் இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் என்று கூறியிருந்தார்.
இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. சுஷ்மா சுவராஜின் கருத்துக்கு காங்கிரஸ் கடும் பதிலடி தந்தது. பாஜகவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக காங்கிரஸ் கூறியது.
இந் நிலையில் சுஷ்மாவின் கருத்து பாஜக கூட்டணிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பல கட்சிகளும் சுவராஜை கண்டித்தன.
இதுகுறித்து சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், சுஷ்மா கூறியுள்ளது அவரது சொந்தக் கருத்து. அதை அவரே விளக்கியுள்ளார். அகமதாபாத் குண்டுவெடிப்பைப் பொறுத்தவரை அனைவருக்கும் தெரியும் இது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ, சிமி, இந்தியன் முஜாஹிதன் உள்ளிட்டோரின் வேலை என்று என்று கூறியிருந்தார்.
ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ் கூறுகையில், சுஷ்மாவின் கருத்து நிச்சயம் பாஜகவின் கருத்தாகத்தான் இருக்க முடியும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இப்படிப்பட்ட தனிப்பட்ட கருத்துக்களும் அவ்வப்போது எழத்தான் செய்கின்றன. அது சரியல்ல, தீவிரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும் என்றார்.
இந் நிலையில் இதுகுறித்து பாஜக விளக்கம் அளித்துள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் இதுகுறித்துக் கூறுகையில், குண்டுவெடிப்புச் சம்பவங்கள் குறித்து எல்.கே.அத்வானி கூறியுள்ள கருத்துக்கள்தான் கட்சியின் எண்ணத்தைப் பிரதிபலிப்பவை. அத்வானி தனது அகமதாபாத் பயணத்தின்போது தெளிவாக கூறியுள்ளார்.
அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் அத்வானி பேசுகையில், இது ஒரு மாநிலத்திற்கு எதிரான அல்லது ஒரு கட்சிக்கு எதிரான போர் அல்ல. இந்த நாட்டின் மீதான தாக்குதல் என்று அத்வானி தெளிவாக கூறியுள்ளார்.
சுஷ்மா சுவராஜ் தான் கூறிய கருத்துக்கள் தனது சொந்தக் கருத்துக்கள் என தெளிவாக கூறியுள்ளார். அவர் கட்சியின் மூத்த தலைவர். எனவே தனது கருத்துக்களுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
இதற்கிடையே தனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று சுஷ்மா கூறியுள்ளார். நான் கூறிய கருத்துக்கள் அப்படியேதான் இருக்கின்றன. ஆனால் இவை எனது சொந்தக் கருத்துக்கள் என்று தற்போது கூறியுள்ளார் சுஷ்மா.












Click it and Unblock the Notifications