கர்நாடகத்தில் கன மழை - ஓகனேக்கல் அருவிகளில் வெள்ளம்
ஓகனேக்கல்: கர்நாடகத்தில் கன மழை பெய்து வருவதாலும், கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும், ஓகனேக்கல் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு அதிக அளவில் நீர் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் தென் மேற்குப் பருவ மழை வேகம் பிடித்துள்ளது. இதன் காரணமாக, அங்குள்ள அணைகளுக்கு நீர்ப் பெருக்கு ஏற்பட்டு நிரம்பி வருகின்றன.
முதலில் ஹோரங்கி அணை நிரம்பியது. பின்னர் கபிணி நிரம்பியது. இந்த அணைகளிலிருந்து உபரி நீர் கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு போய்க் கொண்டிருக்கிறது. இந்த அணையிலும் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
தொடர்ந்து நல்ல மழை பெய்து கொண்டிருப்பதால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவும், கர்நாடக அணைகளிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரி நீரும் தமிழகத்திற்கு வந்து கொண்டுள்ளன.
இதன் காரணமாக தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள ஓகனேக்கல்அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள அனைத்து அருவிகளிலும் கிட்டத்தட்ட விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் கொட்டி வருகிறது. இதனால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அருவிகளின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருவதால், அந்த இடமே பார்ப்பதற்கு ரம்யமாக உள்ளது.
நாளை ஆடிப்பெருக்கு கொண்டாடப்படவுள்ள நிலையில் காவிரியில் தண்ணீர்ப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிக நீர் வரத்தால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications