சேது: தவறு செய்தது வக்கீல்கள்; இருவரும் நீக்கம்-கருணாநிதி

சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி பந்த் நடத்த திமுக அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதையடுத்து பந்த் போராட்டம் உண்ணாவிரதமாக மாற்றப்பட்டது. முதல்வர் கருணாநிதி சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார்.
இருப்பினும் அன்றைய தினம், பந்த் போலவே தமிழகம் முழுக் கடைகள் அடைக்கப்பட்டு, பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தது. தமிழகமே வெறிச்சோடிக் கிடந்தது. பஸ் போக்குவரத்து வழக்கம் போல இல்லை என்று தலைமைச் செயலாளர் திரிபாதியும் பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அதிமுக சார்பில் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மாநில போக்குவரத்துத் துறைச் செயலாளர் கே.என். நேரு, போக்குவரத்துத் துறைச் செயலாளர் சாரங்கி, தலைமைச் செயலாளர் திரிபாதி, டிஜிபி ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு முதல்வர் உள்ளிட்டோருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதில் டிஜிபியும், தலைமைச் செயலாளரும் மட்டும் பதில் மனு தாக்கல் செய்திருந்தனர். மற்றவர்கள் சார்பில் பதில் மனுக்கள் தாக்கலாகவில்லை.
இதையடுத்து நேற்று இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற பெஞ்ச், முதல்வரையும், டி.ஆர்.பாலுவையும் கடுமையாக கண்டித்தது. சட்டத்தை விட நீங்கள் பெரியவர்களா. கைது செய்து நேரில் வரச் சொல்லி விளக்கம் கேட்க நேரிடும் என கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், நான்கு வார காலத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் கருணாநிதி நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், வக்கீல்கள் செய்த தவறால்தான் இந்த குழப்பம் நேரிட்டு விட்டதாக அவர் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படக் கோரி சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கில், ஏன் முதல்வரும், மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் பாலு ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் கேட்டுள்ளதாகவும், பதில் மனு தாக்கல் செய்ய நான்கு வார கால அவகாசம் கொடுத்துள்ளதாகவும் தகவல் அறிந்து, அதுகுறித்து உடனடியாக விசாரித்தறிந்தேன்.
டெல்லியில் பணியாற்றும் தமிழக அரசின் வக்கீல்கள் இவ்வழக்கு குறித்து உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காததுதான் இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்படக் காரணம் என்றும், வழக்கு குறித்து என் கவனத்திற்கு உரிய காலத்தில் கொண்டு வரப்படவில்லை என்றும் தெரிய வந்தது.
கழக அரசு எப்போதும் நீதியின் மாட்சிமையை மதித்து வரும் பண்பை உடையது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நியமிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் வக்கீல்கள் வி.ஜி.பிரகாசம் மற்றும் ஹரீஷ்குமார் ஆகியோர் முக்கியமான இவ்வழக்கு குறித்து என் கவனத்திற்குக் கொண்டு வராமைக்கும், உரிய காலத்தில் பதில் மனு தாக்கல் செய்யாமைக்கும், அதன்காரணமாக சுப்ரீம் கோர்ட்டு என் மீது கூறியுள்ள மிகக் கடுமையான விமர்சனத்திற்கும் பொறுப்பேற்று அந்த இருவரும் தங்களின் பதவிப் பொறுப்பிலிருந்து விலகிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
மன்னிப்பு கேட்ட திரிபாதி:
இந்த வழக்கில் தலைமை செயலாளர் திரிபாதி தனது மனுவில் உச்ச நீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மனுவில் அவர் கூறியிருப்பதாவது: சுப்ரீம் கோர்ட்டையும் அதன் தீர்ப்பையும் நான் பெரிதும் மதிக்கிறேன். கோர்ட் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். கோர்ட் உத்தரவை மீற வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவும் இல்லை.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு முழுமையாக சரிவர நிறைவேற்றப்படவில்லை என்று கோர்ட்டு கருதுமானால் அதற்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு செப்டம்பர் 30ம் தேதி இரவு 10.30 மணிக்குதான் அரசுக்கு கிடைத்தது. சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு டெலிபோன் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாமூல் வாழ்க்கை பாதிக்காமல் நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிடப்பட்டது. ஒரு சில சிறிய அசம்பாவிதம் தவிர பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. சட்டம்-ஒழுங்கு சீர்குலையவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை வழக்கம் போல் நடந்தது.
அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வழக்கு தொடர்ந்தவரின் குற்றச்சாட்டு சரியானது அல்ல. 2749 வழித்தடங்களில் பஸ்கள் வழக்கம் போல் ஓடின. அரசு போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இயல்பு வாழ்க்கை பாதிக்கவும் இல்லை. எனவே கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications