நான் பிரதமர் ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை: மாயாவதி
லக்னோ: மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட நான், ஏன் பிரதமர் பதவிக்கு வரக் கூடாது. நான் பிரதமர் பதவிக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று உ.பி. முதல்வர் மாயாவதி பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம் பிரதமர் பதவிக்கு தான் குறி வைத்திருப்பதை முதல் முறையாக வெளிப்படையாக வெளிப்படுத்தியுள்ளார் மாயாவதி.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக மாயாவதியுடன் அணி சேர்ந்த இடதுசாரி தலைவர்களும், தெலுங்கு தேசம் போன்ற 3வது அணி தலைவர்களும் மாயாவதி பிரதமர் பதவிக்கு வருவார் என அறிவித்தனர். இதனால் பாஜக பெரும் அப்செட் ஆனது.
3வது அணி, இடதுசாரிகளுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை சாக்காக கொண்டு அணி சேரலாம் என நினைத்திருந்த அதன் நினைப்பில் இடதுசாரிகள் இப்படி மண் அள்ளிப் போட்டு விட்டனர்.
மாயாவதி பிரதமர் என்ற அறிவிப்பினால்தான் பாஜகவில் சிலர் ஓட்டுப் போட வராமல் அரசை மறைமுகமாக காப்பாற்றி விட்டனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்த நிலையில், தான் பிரதமர் பதவிக்கு வர விரும்புவதை மாயாவதி இன்று வெளிப்படையாகவே அறிவித்தார்.
லக்னோவில் இன்று நடந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய மாநாட்டில் பேசும்போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
'கொல்ல முயற்சிக்கிறார்கள்'
மாநாட்டில் மாயாவதி பேசுகையில், காங்கிரஸ், பாஜக மற்றும் அவர்களது ஆதரவுக் கட்சிகள், ஒரு தலித் பெண் பிரதமர் பதவிக்கு வருவதை விரும்ப மாட்டார்கள். அதைக் காண அவர்களுக்கு சகிக்காது. நான் பிரதமர் பதவிக்கு வருவதைத் தடுக்க என்னைக் கொல்லக் கூட முயற்சிப்பார்கள்.
எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. ஆனால் கட்சியினர் இதற்காக பயப்படக் கூடாது, தைரியமாக இருக்க வேண்டும். நமது நோக்கம் டெல்லி என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
'வாரிசு தயார்'
எனக்கு ஏதாவது நேரிட்டால் என்ன ஆவது என்ற எண்ணத்தில் ஒரு வாரிசையும் நான் உருவாக்கி வைத்துள்ளேன். என்னைவிட அந்த வாரிசுக்கு 18 முதல் 20 வயது குறைவு. அவர் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவருடைய பெயரை எனக்கு நம்பிக்கையான இரண்டு பேரிடம் கூறி வைத்துள்ளேன். பொருத்தமான நேரத்தில் அவர்கள் பெயரை வெளியிடுவார்கள்.
சொத்துக் குவிப்பு வழக்கு என்ற பெயரில் என்னை சிறையில் அடைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. இப்போதோ அல்லது லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவோ இதை செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதைக் கண்டு பகுஜன் சமாஜ் கட்சியினர் மனம் உடைந்து விடக் கூடாது.
'நான் ஏன் பிரதமராகக் கூடாது?'
மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நான்கு முறை முதல்வரான நான், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ள நான், பிரதமர் பதவிக்கு ஏன் வரக் கூடாது.
எங்களது கட்சியின் சார்பில் 80 எம்.பி. வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து விட்டோம். சமாஜ்வாடி கட்சியிலிருந்து விலகி நமது கட்சிக்கு வந்துள்ள ஷாஹித் சித்திக்கி, பிஜ்னோர் தொகுதியிலிருந்து வருகிற லோக்சபா தேர்தலில் போட்டியிடுவார் என்பதை இப்போது அறிவிக்கிறேன்.
இதேபோல முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நட்வர்சிங்கும் நமது கட்சிக்கு வந்துள்ளார்.
நான் பிரதமராவதை தடுக்க பாஜகவும், சமாஜ்வாடிக் கட்சியும் கை கோர்த்துள்ளன. நம்பிக்ைக வாக்கெடுப்பின்போது இவர்களின் உண்மையான எண்ணம், மன நிலை வெட்ட வெளிச்சமாகி விட்டது. நான் பிரதமர் பதவிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக மத்திய அரசுக்கு இவர்கள் ஆதரவாக உள்ளனர்.
மனுவாதி கொள்கை அடிப்படையில், காங்கிரஸும், பாஜகவும் செயல்படுகின்றன. தலித் பெண் ஒருவர் பிரதமர் பதவிக்கு வருவதை இவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இது அரசியலில் மிகவும் மோசமான போக்காகும்.
ஆனால் பகுஜன் சமாஜ் தொண்டர்கள் இதற்கெல்லாம் பயந்து சோர்ந்து விடக் கூடாது. நான் நாட்டின் உயரிய பதவிக்கு வர அவர்கள் இன்னும் கடுமையாக பாடுபட வேண்டும்.
'லாலுவுக்கு நாவடக்கம் வேண்டும்'
தலித் குடும்பத்தில் பிறந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். இந்த உண்மையை என்னைப் பின்பற்றுபவர்களும் உணர்ந்து மதிக்க வேண்டும். பெருமைப்பட வேண்டும்.
நான் பிரதமரானால் நாடு கெட்டு விடும் என்று பேசியிருக்கிறார் லாலு பிரசாத் யாதவ். அவர் நாவடக்கிப் பேசினால் நல்லது. அவரே பிற்பட்ட வகுப்பைச் ேசர்ந்தவர்தான்.அதை அவர் மனதில் கொண்டால் நல்லது.
இப்படிப்பட்ட தடுப்புகள், இடையூறுகளால் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரை நாட்டின் பிரமதராக்கிப் பார்க்க வேண்டும் என்ற கட்சியினரின் கனவை யாராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது. நான் பிரமதர் பதவிக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஏற்கனவே இந்திய அரசியலில் மிக முக்கிய இடத்திற்கு பகுஜன் சமாஜ் உயர்ந்து விட்டது என்றார் மாயாவதி.












Click it and Unblock the Notifications