சன், சோனி டிவிக்கு எதிராக கேபிள் ஆபரேட்டர்கள் 21ல் உண்ணாவிரதம்
சென்னை: சன், ஸ்டார், சோனி, விஜய் சேனல்களை அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனுக்கு வழங்க வலியுறுத்தி 21ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நலச்சங்க மாநிலத் தலைவர் சகிலன் கூறுகையில், அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் தொடங்கப்படும் என்று கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி, தஞ்சையில் அதிநவீன கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட் ஆபரேட்டர்களுக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
கோவையிலும் அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் தொடங்கப்பட்டுள்ளது. அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனுக்கு சன், ஸ்டார், விஜய், சோனி குழுமங்கள் தங்கள் சேனல்களை வழங்க வற்புறுத்தியும், 18 ஆண்டுகளாக இந்த தொழிலை நடத்தி வரும் ஆப்ரேட்டர்களுக்கு மட்டுமே அரசு கேபிள் கார்ப்பரேஷன் இணைப்பு வழங்குவது, கேபிள் கார்ப்பரேஷனில் அரசியல் தலையீட்டை தடுப்பது, அனைத்து மாவட்டங்களிலும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கொண்ட ஆலோசனை குழுக்களை அமைப்பது, நலவாரியத்தை உடனடியாக அமல்படுத்துவது ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சென்னை, கோவை, தஞ்சாவூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் வரும் 21ம் தேதி உண்ணாவிரதம் நடத்தப்படும்.
நான்கு மையங்களில் நடக்கும் போராட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஆபரேட்டர்களும் கலந்து கொள்வார்கள். சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் எனது தலைமையில் போராட்டம் நடக்கும். இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கேபிள் ஆபரேட்டர்கள் கலந்து கொள்வார்கள் என்றார்.
--












Click it and Unblock the Notifications