பிஎம்டபிள்யூ: சாட்சியிடம் பேரம்-வக்கீல்களுக்கு தண்டனை
டெல்லி: 7 பேரை காரை ஏற்றிக் கொன்ற குற்றவாளியைக் காப்பாற்ற, சாட்சியிடம் பண பேரத்தில் ஈடுபட்ட இரு வக்கீல்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் வழக்குகளில் ஆஜராக தடை விதித்துள்ளது.
டெல்லியை சேர்ந்தவர் சஞ்சீவ் நந்தா. இவரது தாத்தா எஸ்.எம். நந்தா முன்னாள் கடற்படைத் தளபதி ஆவார். கடந்த 1999ம் ஆண்டு பிஎம்டபிள்யூ காரில் சென்ற நந்தா, தாறுமாறாக கார் ஓட்டி 3 போலீஸார் உள்பட 7 பேரைக் கொன்றார்.
இந்த வழக்கில் நந்தா சார்பாக மூத்த வக்கீல் ஆர்.கே.ஆனந்த் ஆஜரானார். அரசு தரப்பில் வக்கீல் ஐ.யு.கான் ஆஜராகி வந்தார். வழக்கின் முக்கிய சாட்சியாக சஞ்சீவ் குல்கர்னி என்பவர் இருக்கிறார்.
அவருடைய சாட்சியால் நந்தாவுக்கு தண்டனை கிடைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கார் ஏற்றிக் கொன்ற வழக்கு விசாரணை கீழ் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.
இந்த நிலையில், நந்தாவை காப்பாற்ற வக்கீல்கள் இருவரும் முடிவு செய்தனர். கோர்ட்டில் எதிரும், புதிருமாக வாதிட வேண்டிய வக்கீல்கள் ஒன்று சேர்ந்து கொண்டு குல்கர்னியை சந்தித்தனர்.
அவரிடம், நந்தாவை காப்பாற்றும் வகையில் மாற்றி சாட்சியம் அளிக்க வேண்டும். அதற்காக தேவையான அளவு பணம் தருகிறோம் என்று பேரம் பேசினர்.
இதை தனியார் தொலைக்காட்சி ஒன்று ரகசியமாக வீடியோவில் படமாக்கி தொலைக்காட்சியில் ஒளிபரப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அரசு வக்கீல் பதவியில் இருந்து கான் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். மேலும் டெல்லி பார் கவுன்சிலில் இருந்தும் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையடுத்து வக்கீல்கள் பேரம் பேசிய விவகாரத்தை டெல்லி உயர்நீதிமன்றம், வழக்காகப் பதிவு செய்து விசாரித்தது. நீதிபதிகள் மன்மோகன் சரின், மதன் லோகுர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், தனியார் தொலைக்காட்சியிடம் இருந்து அனைத்து கேசட்டுகளையும் வாங்கி பார்த்தது.
அப்போது, வீடியோ காட்சிகள் அனைத்தும் உண்மையானவை என்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். மூத்த வக்கீலான ஆனந்த் மற்றும் கான் இருவருக்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில் மூத்த வக்கீல்களான இருவரிடம் இருந்து இப்படிப்பட்ட பொறுப்பற்ற செயலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நீதித்துறை நிர்வாகத்தையே கேலிக்குரியதாக்கி விட்டனர். இது தொடர்பாக அவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டாலும் கூட ஏற்றுக் கொள்ள முடியாது.
சாட்சிகளிடம் பேரம் பேசிய இருவரும் டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் டெல்லியை சுற்றி உள்ள எந்தவொரு கோர்ட்டிலும் அடுத்த 4 மாதங்களுக்கு ஆஜராக கூடாது. இருவருக்கும் தலா ரூ.2,000 அபராதமும் விதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications