ஜம்மு-தீவிரவாதிகளிடம் 7 பிணைய கைதிகள்!
ஜம்மு: ஜம்முவில் இன்று அதிகாலை தீவிரவாதிகள நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் ராணுவ அதிகாரி, பொது மக்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக பலியாயினர். இதைத் தொடர்ந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேரை பிணைய கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு தீவிரவாதிகள் மிரட்டி வருகின்றனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு மாவட்டம் இன்று அதிகாலை 3 மணியளவில் மிஸ்ரிவாலா என்ற இடத்தில் உள்ள செக் போஸ்ட் பகுதிக்குள் ராணுவ உடையில் நுழைந்த 3 தீவிரவாதிகள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் மீது திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சுதாரித்துக் கொண்ட ராணுவத்தினர் தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதையடு்த்து தீவிரவாதிகள் அங்கிருந்து ஓடினர்.
பாதுகாப்பு படையினர் அவர்களை விரட்டிச் சென்றனர். பந்தாலாப் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திக் கொண்டே ஓடினர். இதில் அப்பகுதியில் வசிக்கும் அப்பாவி பொதுமக்கள் 4 பேர், ராணுவ அதிகாரி ஆகியோர் இறந்தனர்.
அப்போது அங்குள்ள ஒரு வீட்டுக்குள் திடீரென்று புகுந்த தீவிரவாதிகள், 4 குழந்தைகள் மற்றும் 3 பெண்களை பிணைய கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டி வருகின்றனர். காலையில் இருந்து தொடர்ந்து இருதரப்பிலும் தாக்குதல் நடந்து வருகிறது. இதில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.
அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக ராணுவத்தினர் வெளியேற்றி வருகின்றனர். தீவிரவாதிகள் நுழைந்துள்ள வீட்டை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர். இதில் பெண் ஒருவர் மீட்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. எனினும் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். பிணைய கைதிகளாக உள்ள பெண்களையும், குழந்தைகளையும் மீட்க பாதுகாப்பு படையினர் போராடி வருகின்றனர்.
நேற்று இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்திய படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். அந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்ட 4 பேர் கொண்ட தீவிரவாதி குழு இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ளது. தீவிரவாதிகள் சினூர் என்ற பகுதியில் பதுங்கியிருந்து இன்று காலை தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சங்கர்ஸ் சமிதி பேரணி ஒத்தி வைப்பு:
அமர்நாத் நில விவகாரம் தொடர்பாக இன்று பேரணி நடத்த அமர்நாத் யாத்திரா சங்கர்ஸ் சமிதி திட்டமிட்டிருந்தது. தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் பேரணி நடத்த வேண்டாம் என்று தெரிவித்தனர். இதையடுத்து பேரணி தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சங்கர்ஸ் சமிதியின் நரேஷ் பதா கூறுகையில், அமர்நாத் நில விவகாரம் தொடர்பாக ஆளுநர் அமைத்துள்ள குழுவுடன் ஓரிரு நாளில் பேச இருக்கிறோம். நாட்டின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றார்.
இதற்கிடையே காஷ்மீரின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் இருந்து வருதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் அங்கு கல்வி நிறுவனங்கள் செயல்படவில்லை.












Click it and Unblock the Notifications