சரவணா ஸ்டோர்ஸ்: தீ அணைக்கப்பட்டது-2 பேர் கதி என்ன?
{image-Saravana Stores250_01092008.jpg tamil.oneindia.com}சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடையில் இன்று காலை ஏற்பட்ட தீ பிற்பகல் வாக்கில் பெருமளவில் அணைக்கப்பட்டது. கடையின் மேல் மாடியில் தங்கியிருந்த இரு ஊழியர்களின் கதி என்ன என்று தெரியவில்லை.
சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெரு தமிழகத்தின் மிக மிக குறுகிய வர்த்தக தெருக்களில் ஒன்று. இந்தத் தெரு வழியாக தினசரி ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். தமிழகத்தின் முன்னணி நகை, ஜவுளிக் கடைகள் இங்கு உள்ளன.
சரவணா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்டவைதான் இந்த தெருவில் உள்ள முக்கிய வர்த்தக நிறுவனங்கள்.
சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் ஜவுளிக் கடை, பாத்திரக் கடை, இனிப்பகம் உள்ளிட்ட பல பிரிவுகள் இயங்கி வருகின்றன. தனித் தனி பிரமாண்டக் கட்டடங்களாக இவை செயல்படுகின்றன.
இன்று காலையில் பாத்திரக் கடையில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இந்தக் கட்டடம் 6 மாடிகளைக் கொண்டதாகும். 5 மற்றும் 6வது தளங்களில் உள்ள சிலிண்டர்கள் வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சாப்பாடு சமைக்கும் வேலை நடந்தபோது சிலிண்டர்கள் வெடித்ததாக தெரிகிறது.
இதையடுத்து அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. மேல் மாடியில் தங்கியிருந்த ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் 3 பேர் மட்டும் சிக்கிக் கொண்டனர். அவர்களில் ஒருவரை தீயணைப்புப் படையினர் சற்று நேரத்திற்கு முன்பு மீட்டனர். 2 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை.
இரண்டு பிரமாண்ட ஏணிகள், 2 மீட்பு ஏணிகள், 3 ஆம்புலன்ஸ்கள், 25க்கும் மேற்பட்ட மெட்ரோ வாட்டர் டாங்கர்கள், 16 தீயணைப்பு வண்டிகள் மீட்பு மற்றும் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, அசோக் நகர், மயிலாப்பூர், பாரிமுனை, கீழ்ப்பாக்கம், வியாசர்பாடி, வேப்பேரி ஆகிய பகுதிகளிலிருந்து தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன.
இந்த கட்டடத்தில் சாதாரண பிளாஸ்டிக் பொருட்கள் முதல் நகை வரை பல தரப்பிலான பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதால் தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இங்கு ஏற்பட்ட தீ அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியது. அந்த தீயை தீயணைப்புப் படையினர் போராடி அணைத்து விட்டனர்.
இன்னும் தீ முழுமையாக அணைக்கப்படவில்லை. தீவிபத்ைதத் தொடர்ந்து ரங்கநாதன் தெருவில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு விட்டன. தீயணைப்பு வாகனங்களால் உள்ளே கூட போக முடியாத அளவுக்கு ரங்கநாதன் தெரு குறுகியது என்பதால் தீயணைப்புப் பணி கடினமானதாக இருந்தது. இருப்பினும் மிகவும் சிரமப்பட்டு போராடி தீயணைப்புப் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.
300க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள் போராடி தீயை அணைத்து வருகின்றனர். தீ பெருமளவில் அணைக்கப்பட்டு போதிலும் இன்னும் உள்புறத்திலிருந்து கரும்புகை வெளியாகிக் கொண்டிருப்பதால் உள்ளே தீ எரிந்து கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது. எனவே தீவிபத்து ஏற்பட்ட கட்டட தளங்களுக்குள் யாரும் போக இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து கடும் பாதிப்பு:
சம்பவம் நடந்துள்ள தி.நகர் உஸ்மான் சாலை பகுதியை லட்சக்கணக்கான மக்கள் தினசரி பயன்படுத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் மிக மிக பிசியான பகுதி இது. எனவே தீவிபத்தால் இந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
போக்குவரத்து முழுமையாக மாற்றப்பட்டு புதிதாக திறக்கப்பட்டுள்ள வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான போலீஸார் போக்குவரத்ைத சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டிருக்காமல், 9 மணிக்கு மேல் கடை திறந்த பின்னர் ஏற்பட்டிருந்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தி.நகர் பகுதியில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தி.நகரில் உள்ள பெரும்பாலான கடைகளும் கூட மூடப்பட்டுள்ளன. அந்தப் பகுதியே ஸ்தம்பித்துக் காணப்படுகிறது.
15 பேர் மீட்பு - கமிஷனர்
இதற்கிடையே தீவிபத்து ஏற்பட்ட சரவணா ஸ்டோர்ஸுக்கு மாநகர காவல்துறை ஆணையர் ஆர்.சேகர் வந்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இதுவரை 15 பேரை மீட்டுள்ளனர். 300 போலீஸார் தி.நகர் பகுதியில் முகாமிட்டு மீட்புப்ப் பணிகளிலும், போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டுள்ளதாக தெரியவில்லை. இருப்பினும் சேதம் பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இன்னும் உள்ளே போகவில்லை. போன பின்னர்தான் சேதத்தை மதிப்பிட முடியும் என்றார்.
தீயணைப்புத் துறை இணை இயக்குநர் ஜெயகாந்தன் கூறுகையில், தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு வண்டிகள் வந்து விட்டன. தீ கிட்டத்தட்ட அணைக்கப்பட்டு விட்டது. விரைவில் முழுமையாக அணைக்கப்பட்டு விடும் என்றார்.












Click it and Unblock the Notifications