அண்ணா நூற்றாண்டு: 1405 கைதிகள் விடுதலை
சென்னை: அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி 1405 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். கைதிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு தடை விதிக்க கோரி ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி விடுத்த கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இருப்பினும் அரசுக்கு சில நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.
அண்ணா பிறந்த நாளையொட்டி ஆயுள் தண்டனைக் கைதிகள் 1405 பேரை கருணை அடிப்படையில் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இவர்கள் அனைவரும் 7 ஆண்டுகளை சிறையில் கழித்தவர்கள் ஆவர்.
இவர்கள் அனைவரும் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலியின் இல்லத்திற்கு வந்தார். நேற்று விடுமுறையாக இருந்தபோதிலும், அவசரம் கருதி ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்.
இதையடுத்து பொது நலன் மனுவை அவர் தலைமை நீதிபதியிடம் வழங்கினார். அதைப் பெற்ற தலைமை நீதிபதி அதைப் பதிவு செய்யுமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டார். மேலும், அட்வகேட் ஜெனரல் நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார். இரவு 8 மணிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
சுவாமி தனது மனுவில், செப்டம்பர் 15ம் தேதியன்று கருணை அடிப்படையில், 1405 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்கப் போவதாக அரசு அறிவித்தள்ளது. இவர்களை விடுவிப்பது தொடர்பாக முறையான தகவல்கள், சட்ட விதிமுறைகள், உரிய வழிகளை அரசு கடைப்பிடிக்கவில்லை. இது அரசியல் சட்டத்தின் 14வது விதியை மீறும் செயலாகும்.
இதுதொடர்பான அரசின் முடிவுக்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் பர்னாலா பிறப்பித்துள்ள உத்தரவின் மூலம் அரசியல் சட்டத்தின் 161வது பிரிவு கேள்விக்குறியாகியுள்ளது.
அரசியல் காரணங்களுக்காக 1405 கைதிகளை விடுவிக்கும் முடிவை எடுத்துள்ளது அரசு. விடுதலை செய்யப்படவுள்ள கைதிகளில் பெரும்பாலானவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் மதுரை சிபிஎம் கவுன்சிலர் லீலாவதியைக் கொன்றதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 திமுகவினரும் அடக்கம்.
எனவே இந்த ஆயுள் தண்டனைக் கைதிகள் தண்டனையை முடிவு செய்யாமல், விடுதலை செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும். அரசு உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சுவாமி கூறியிருந்தார்.
பின்னர் அட்வகேட் ஜெனலர் மாசிலாமணி வந்தவுடன் சுவாமியின் மனுவை தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.
மனுவைப் பரிசீலித்த பின்னர், வழக்கமாக கைதிகளை விடுவிக்கும்போது பெறப்படும் உத்தரவாத பாண்டுகளைப் பெற்றுக் கொண்டு கைதிகளை விடுவிக்க வேண்டும். இந்த வழக்கில் மனுதாரர் சுப்ரமணியம் சுவாமி வெற்றி பெற்றால், அரசு தனது உத்தரவை திரும்பப் பெற்று அனைத்துக் கைதிகளையும் மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்து கைதிகள் விடுதலைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கை அக்டோபர் 30ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அன்று இந்த வழக்கை நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் விசாரிப்பார் எனவும் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், முன்னதாக சுப்பிரமணியம் சுவாமி வெளியிட்ட ஒரு அறிக்கையில், தமிழக அரசின் உத்தரவு சட்டவிரோதமானது. பொது அமைதிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.
கவுன்சிலர் லீலாவதியைக் கொடூரமாக கொன்ற 3 பேர் உள்பட பல திமுகவினர் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
இதுபோலவே கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியன்று, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் 150வது ஆண்டு விழா என்ற பெயரில் ஆந்திர அரசு 1500 கைதிகளை விடுதலை செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆந்திர அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், 7 ஆண்டுகள் முடிந்து விட்டது. எனவே கைதிகளை விடுதலை செய்கிறோம் என நீங்கள் (அரசு) கூற முடியாது. இப்படிச் செய்தால், நாளை மும்பை தொடர் குண்டுவெடிப்புக் கைதிகளும், நித்தாரி கொலைக் கைதிகளும் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறுவார்கள் என்று கண்டித்து ஆந்திர அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது என்று கூறியுள்ளார் சுவாமி.
விடுதலை-கைதிகள் உற்சாகம்:
அரசு அறிவித்தபடி இன்று 1,405 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். தண்டனை பெற்றவர்களில் 7 ஆண்டு முடிந்தவர்களும், 60 வயதானவர்களாக இருந்தால் 5 ஆண்டு சிறை தண்டனை முடித்தவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை பெற்ற கைதிகளை வரவேற்க உறவினர்கள் சிறை வாசலில் நின்றிருந்தனர். கைதிகள் விடுதலை பெற்று உற்சாகமாக சென்றனர்.
பாளை சிறையில் இருந்தபடி நெல்லை பல்கலையில் எம்.ஏ., முடித்த பட்டதாரி கைதிகள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் கூறுகையில், நன்னடத்தை அடிப்படையில் நாங்கள் விடுதலை பெற்றுள்ளோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சிறையில் இருந்தபடி பட்டப்படிப்பு முடித்துவிட்டோம். தனியார் நிறுவனங்களில் எங்களுக்கு வேலை கிடைக்குமா என்பது தெரியவில்லை. எனவே அரசே எங்களுக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ரூ.1.70 கோடி மிச்சம்...
தமிழக சிறைகளில் கைதி ஒருவருக்கு நாள் வீதம் உணவுக்காக ரூ.35 செலவாகிறது. 1,405 கைதிகள் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து ரூ.1.70 கோடி செலவு அரசுக்கு மிச்சமாகியுள்ளது என்று சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications