திமுக ஆட்சி கவிழும்-சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரும்: வைகோ
மதுரை: திமுக அரசு விரைவில் கவிழும். சட்டசபைக்கு தேர்தல் வரும். அதில் திமுக கூட்டணியையும், மத்தியில் காங்கிரஸ் கூட்டணியையும் தோற்கடிக்கவே அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது மதிமுக என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டையொட்டி மதுரையில் மதிமுக சார்பில் மண்டல மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்டு வைகோ நிறைவுரையாற்றினார்.
அவர் பேசுகையில், விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. அத்துடன் திமுக ஆட்சி கவிழ்ந்து சட்டசபைக்கும் தேர்தல் வரலாம். தேர்தலுக்கு தொண்டர்களை ஆயத்தப்படுத்தவும், மக்களை திரட்டவும் தான் இந்த மாநாடு.
21 ம் தேதி முப்பெறும் விழாவை திருச்சியில் நடத்துவதாக கருணாநிதி அறிவித்துள்ளார். அண்ணாத்துரை பிறந்தது செப்டம்பர் 15. ஏன் 21 ம் தேதி விழா திருச்சியில் விழா நடத்த வேண்டும். நூற்றாண்டு விழா என்பது 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வரும். இந்த விழாவையாவது இன்று கொண்டாடி இருக்கலாம்.
அண்ணாத்துரை பிறந்த நாளுக்கு புதுச்சேரி மாநிலத்தில் அரசு விடுமுறை அறிவித்த பின்பு தமிழகத்தில் அவசரம் அவசரமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈ.வே.ரா. தன் வீட்டிற்கு வந்த போது அழகிரியை மடியில் வைத்து கொஞ்சியதாக கருணாநிதி கூறுகிறார். ஏன் இந்த பித்தலாட்டம். இதை ஏன் நெஞ்சுக்கு நீதியில் எழுதவில்லை.
சிவகங்கை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தா.கிருட்டிணன் கொலை செய்யப்பட்டதற்கு யார் காரணம். 87 சாட்சிகள் பல்டி அடித்து ஏன். தமிழக அரசு அப்பீலுக்கு ஏன் செல்லவில்லை.
காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, விலைவாசி உயர்வு, மின் வெட்டு என பல பிரச்சனைகள் உள்ள நிலையில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்துடைப்பு நாடகம் மக்களிடம் எடுபடாது.
கடலூர் திமுக மகளிர் மாநாட்டில் மின்சாரம் திருட்டப்பட்டது தொடர்பாக 22 போட்டோ ஆதாரங்கள் காட்டப்பட்டது. இதற்கு இதுவரை பதில் இல்லை.
இந்திய அரசு வழங்கிய ராடார் கருவிகளை வைத்துக் கொண்டு தான் இலங்கை ராணுவம் தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. இனப்படு கொலைக்கு உதவும் மத்திய அரசு தூக்கி எறிப்பட வேண்டும்.
மக்கள் விரோத ஆட்சியாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளை அகற்றவே அதிமுகவுடன் மதிமுக கூட்டணி வைத்துள்ளது என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications