மாணவிகளிடம் சில்மிஷம்: பள்ளி ஆசிரியரிடம் விசாரணை
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் மீது விசாரணை நடைபெற்றது. அவர் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி புழுதிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு தமிழ் ஆசிரியராக பணியாற்றுகிறார் ராமலிங்கம். பொறுப்பு தலைமை ஆசிரியராகவும் உள்ளார்.
இவர் பாடம் நடத்தும்போது மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்துடன் பேசுவது என்று இருந்துள்ளார். மேலும், சில மாதங்களாக மாணவிகள் சிலரை அழைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
பொறுத்து பார்த்த மாணவிகள், தங்களது பெற்றோர்களிடம் புகார் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் ஆசிரியர் ராமலிங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தினர். ஆனால், ராமலிங்கத்தின் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்கமால் இருந்துள்ளது.
இதையடுத்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மனு நீதி நாள் முகாமில் அசிரியர் ராமலிங்கம் மீது நடவடிக்கை எடுக்க கோரி புழுதிப்பட்டி கிராம மக்கள் மனு அளித்தனர்.
இதுகுறித்து விசாரிக்கும்படி கல்வித்துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து புழுதிப்பட்டி அரசு உயர் நிலைப் பள்ளி மாணவிகள் மற்றும் மற்ற ஆசிரியர்களிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஹரிஹரன் விசாரணை நடத்தினார். இதில் ராமலிங்கம் குறித்த புகார் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ராமலிங்கம் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
ராமலிங்கம் கடந்த ஆண்டு வலசைபட்டியில் உள்ள பள்ளியில் பணியாற்றியபோது ஒரு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதை பார்த்த கிராம மக்கள் அவரை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இது தொடர்பான பிரச்சனையில் அரசு அதிகாரிகள் சிலரை கையில் போட்டுக் கொண்டு விசாரணையில் இருந்து தப்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications