சிங்கூரை காலி செய்கிறது டாடா-உபகரணங்கள் அகற்றம்
கொல்கத்தா: மமதா பானர்ஜியின் நிலையில் சற்றும் மாற்றம் இல்லாததாலும், தொடர்ந்து பணி செய்வதற்கு உகந்த சூழ்நிலை இல்லாததாலும் தனது நானோ கார் தொழிற்சாலையை காலி செய்யும் பணியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடங்கி விட்டது. முக்கிய உபகரணங்களை அங்கிருந்து எடுத்துச் செல்லும் வேலையை டாடா நிறுவனம் தொடங்கியுள்ளது.
சிங்கூரில் அமைந்துள்ள டாடாவின் நானோ தொழிற்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களில் பெரும்பாலானவற்றை திருப்பிக் கொடுக்க வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதுதொடர்பாக ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி முன்னிலையில், மேற்கு வங்க அரசுக்கும், மமதா பானர்ஜிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இருப்பினும் மமதா பானர்ஜி 300 ஏக்கருக்கும் மேலான நிலங்களைக் கேட்டதால் மீண்டும் சுணக்கம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக தொடர்ந்து இழுபறி நிலவி வந்தது.இந்தநிலையில் ஒரு வாரத்திற்குள் முடிவு அறிவிக்க வேண்டும் என மமதா திடீரென கெடு விதித்தார்.
இந்தச் சூழ்நிலையில்,டாடா நிறுவனம் சிங்கூரைக் காலி செய்யும் வேலையை தொடங்கி விட்டது. பத்து நாட்களுக்கு முன்பே முக்கிய உபகரணங்களை எடுத்துச் செல்ல ஆரம்பித்து விட்டனராம். தற்போது முழு வேகத்தில் காலி செய்யும் வேலை நடந்து வருகிறது.
முழுமையாக காலி செய்ய இன்னும் சில வாரங்கள் பிடிக்கும் என தெரிகிறது.
அக்டோபர் மத்தியில், உத்தராஞ்சல் மாநிலம் பந்த் நகர் பிரிவிலிருந்து முதல் 1000 நானோ கார்களை ரிலீஸ் செய்ய டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
நானோ கார் தொழிற்சாலையின் முக்கிய உற்பத்திப் பிரிவு கர்நாடகா, ஹரியாணா மற்றும் மகாராஷ்டிரா ஆகியவற்றில் ஒரு மாநிலத்தில் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கூரைக் காலி செய்யும் தனது முடிவை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் முறைப்படி அறிவிக்கவுள்ளது.


Click it and Unblock the Notifications
