7ம் வகுப்பு மாணவி பலாத்காரம்-கொலை: 3 ஆசிரியர்கள் கைது
பெர்ஹாம்பூர்: ஒரிஸ்ஸாவில் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு மாணவி ஆசிரியர்களாலே கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரிஸ்ஸா மாநிலம் கஞ்சம் மாவட்டம் பொல்சரா பகுதியைச் சேர்ந்தவர் பிரஞ்சி நாராயண் சாஹூ. இவரது மகள் அங்குள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்தார். நேற்று பள்ளி சென்ற சிறுமி, 3 ஆசிரியர்களால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று காலை 10.30 மணிக்கு பள்ளிக்கு சென்ற அந்த சிறுமி, 11 மணியளவில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து சிறுமியின் தந்தை பிரஞ்சி போலீஸில் புகார் செய்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி மனோஜ் குமார் சமந்த் கூறுகையில், பள்ளியின் ஆண்கள் கழிவறையில் சிறுமியின் உடல் கிடந்தது. பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதில் தொடர்புடைய தலைமை ஆசிரியர் பிஸ்வநாத் கௌடா, ஆசிரியர்கள் சந்தோஷ் குமார் பட்நாயக் மற்றும் துர்கா சாஹூ ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவி 10.30 மணிக்கு பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால் வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் என்று குறிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் நாளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளனர் என்றார்.