இலங்கைத் தமிழர்-அனைத்துக் கட்சிக் கூட்டம்: அதிமுக, மதிமுக புறக்கணிப்பு

இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து விவாதித்து முடிவெடுக்க அக்டோபர் 14ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. முதல்வர் கருணாநிதி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக இன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் திடீரென அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், நேரத்தை வீணடிக்கும் முதல்வர் கருணாநிதியின் கண்துடைப்பு கூட்டம் இது. இந்த நாடகத்தில் அதிமுக பங்கேற்காது.
ஈழத் தமிழர் பிரச்சினையின்போது திமுக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத நிலையில், கருணாநிதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இப்போது மத்தியில் அவரது கட்சி ஆட்சியில் பங்கேற்றுள்ளது. மாநிலத்தில் ஆட்சியில் உள்ளது. முன்பு செய்ததைப் போல இப்போது அவரால் செய்ய முடியுமா?
இலங்கைத் தமிழர்கள் மீது அவருக்கு உண்மையிலேயே பரிவும், அக்கறையும் இருந்தால், மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலிருந்து அவர் வெளியேற வேண்டும். அதற்குப் பதில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துகிறார். இதனால் எந்தவித தீர்வையும் காண முடியாது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும்போதெல்லாம் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. அதேபோல இலங்கை அரசுக்கு இந்தியா ராணுவ உதவிகளை செய்தபோதெல்லாம் அதையும் அமைதியாக வேடிக்கை பார்த்தவர்தான் கருணாநிதி. எனவே அவருக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட தார்மீக உரிமை இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
வைகோ விடுத்துள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்களை கருணாநிதி கைவிட்டு விட்டார். மத்திய அரசு இலங்கை அரசுக்கு ராணுவ உதவிகளையும், நிதியுதவியையும் செய்து கொண்டிருக்கிறது. இதை கருணாநிதி தடுக்கவில்லை. எனவே அவர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட உரிமை இல்லை என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications