ஜோதிடர் கொலை: மனைவி உள்பட 7 பேர் கைது
தென்காசி: தென்காசி அருகே ஜோதிடர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையை ஜோதிடரின் மனைவியின் தூண்டுதலின் பேரில் கள்ளக்காதலன் செய்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜோதிடரின் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசியை அடுத்த வடகரை, இல்லத்தார் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிடர் குருசாமி. ரியல் எஸ்டேட் புரோக்கராகவும் இருந்தார். கடந்த 29ம் தேதி அதிகாலை 1 மணிக்கு குருசாமியின் வீட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல் அவரை வெட்டி படுகொலை செய்தது.
இதுதொடர்பாக அச்சன்புதூர் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து குருசாமியின் மனைவி பரமேஸ்வரியே இந்த கொலையை நடத்தியது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து நேற்று பரமேஸ்வரி, அவரது கள்ள காதலன் செங்கோட்டையைச் சேர்ந்த ரவிசங்கர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து தென்காசி டிஎஸ்பி மயில்வாகணன் கூறுகையில், திருமணத்திற்கு முன்னரே குருசாமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. திருமணத்திற்கு பிறகும் இது தொடர்ந்துள்ளது. மனைவி பரமேஸ்வரி மீதும் சந்தேகப்பட்டுள்ளார்.
இதனால் பரமேஸ்வரி மனமுடைந்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் குளிர்பான நிறுவனத்தில் பணிபுரியும் ரவிசங்கருடன் பழக்கம் ஏற்பட்டது. இதை ஜோதிடர் குருசாமி கண்டித்ததுடன் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன பரமேஸ்வரி இந்த தகவலை ரவிசங்கரிடம் தெரிவித்தார். மேலும் கணவன் குருசாமியை கொலை செய்யுமாறு கூறியுள்ளார்.
சுரேஷ், பாலமுருகன், சோமு, ஸ்டாலின், பாலு ஆகியோருடன் ரவிசங்கரும் சேர்ந்து குருசாமியை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர்.
ஆரம்பத்தி்ல் குருசாமிக்கு பெண்கள் தொடர்பு, ரியல் எஸ்டேட் தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினோம்.
மேலும் குருசாமி சில கொள்ளை கும்பலுக்கு ஆளில்லாத வீடுகளில் கொள்ளையடிக்க தகவல் கொடுக்கும் பழக்கமும் இருந்துள்ளது. குருசாமியின் வீட்டுக்கு அடிக்கடி நம்பர் பதிவு செய்யாத பைக்கில் இளைஞர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரவிசங்கர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications