பெரம்பலூர்-சாலை விபத்தில் 5 தேமுதிகவினர் பலி
பெரம்பலூர்: இன்று சென்னையில் நடக்கும் தேமுதிக இளைஞர் அணி மாநாட்டில் பங்கேற்க வந்த நாகர்கோவிலைச் சேர்ந்த 5 தொண்டர்கள் பெரம்பலூர் அருகே நடந்த சாலை விபத்தில் பலியாயினர்.
இந்த மாநாடு இன்று மாலை சென்னை தீவுத்திடலில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள தமிழகத்தில் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தேமுதிகவினர் சென்னையில் குவிந்து வருகின்றனர்.
கார், பஸ், வேன், லாரிகளில் அவர்கள் சென்னைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
நாகர்கோவிலில் இருந்து செல்வகுமார் (31), கனகராஜ் (28), அந்தோணிராஜ் (38), நாகராஜ் (32), சுரேஷ், சிதம்பரம், சண்முகம் (32) ஆகியோர் காரில் நேற்றிரவு சென்னைக்கு புறப்பட்டனர்.
காரை அய்யப்பன் ஓட்டினார். இன்று காலை 6 மணிக்கு பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் ஆலத்தூர்கேட் அருகே வநதபோது சென்னையில் இருந்து மதுரைக்கு சென்ற ஆம்னி பஸ் மீது மோதியது.
இதில் கார் மீது பஸ் ஏறி இறங்கி கார் நொறுங்கியதில் அதில் இருந்த செல்வகுமார், சண்முகம், அந்தோணி, கனகராஜ், அய்யப்பன் ஆகிய 5 பேரும் உடல் நசுங்கி பலியாயினர்.
சுரேஷ், சிதம்பரம், நாகராஜன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தால் அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்தில் இறந்த அய்யப்பன் ராணுவ வீரர் ஆவார். விடுமுறையில் வந்த அவர் மாநாட்டுக்கு சென்ற போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ரயில் மோதி தொண்டர் பலி:
அதே போல புதுக்கோட்டையில் இருந்து ஒரு வேனில் தேமுதிக தொண்டர்கள் சென்னை வந்தனர். அதிகாலையில் செங்கல்பட்டு அருகே மயிலம் என்ற இடத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் வேன் நின்றது.
வேனில் இருந்த மணிகண்டன் என்பவர் கீழே இறங்கி தண்டவாளம் அருகில் சிறுநீர் கழிக்கச் சென்றார். அப்போது ரயில் மோதி பலியானார்.












Click it and Unblock the Notifications