வட இந்தியர்கள் மீது தாக்குதல்-ராஜ் தாக்கரே கைது

இருப்பினும் இன்னொரு வழக்கில் அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருப்பதால் அவரை இன்று போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ராஜ் தாக்கரேவின் கைதையடுத்து மும்பையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ரயில்வே தேர்வு எழுத வந்த வட இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்துமாறு தனது அமைப்பினரை தூண்டிவிட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவ சேனையிலிருந்து பிரிந்து வந்ததில் இருந்து ராஜ் தாக்கரேவின் அட்டூழியம் அதிகமாகிவிட்டது. மராட்டியர்கள் நலனுக்காக போராடுவதில் அதிகம் பாடுபடுவது யார் என்ற போட்டியில் சிவசேனாவும் நவ நிர்மாண் சேனாவும் போட்டி போட்டிக் கொண்டு இறங்கியுள்ளன.
மராட்டியர் நலன் என்ற பெயரில் உத்தரப் பிரதேச, பிகார் கூலித் தொழிலாளிகளைத் தாக்குவதையே வேலையாகக் கொண்டுள்ளனர் இந்த இரு அமைப்பினரும். அதிலும் ராஜ் தாக்கரே அமைப்பினரின் அராஜகம் மிக அதிகமாகி வருகிறது.
இந் நிலையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரயில்வே தேர்வு எழுத வந்த பிகாரிகளை இவரது அமைப்பினர் அடித்து உதைத்தனர்.
இதற்கு ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட வட இந்திய தலைவர்களிடம் கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து ராஜ் தாக்கரே மீது மும்பையின் கார்வாடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
முடிந்தால் தன்னை கைது செய்யலாம் என ராஜ் தாக்கரே மாநில காங்கிரஸ் அரசுக்கு சவால் விட்டார். என்னை கைது செய்தால் மகாராஷ்டிராவே பற்றி எரியும் என்றார்.
இந் நிலையில் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் ரத்னகிரி மாவட்டத்தில் வைத்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் கைது செய்யப்பட்டார். பின்னர் பந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக அவர் மும்பை கொண்டு வரப்பட்டார்.
இவரது கைதையடுத்து மும்பையில் பல இடங்களில் இவரது அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. பல டாக்சிகள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான ஆட்டோ, டாக்சிகள் ஓடவில்லை.
போரிவிலி பகுதியில் லாரிகளை எரிக்க முயற்சி நடந்தது. முலுன்ட் பகுதியில் டோல் கேட் தீ வைத்து எரிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபமின் வீடு மீது கல்வீச்சும் நடந்துள்ளது.
இதனால் மும்பையில் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. பல நகர்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மும்பை முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே ராஜ் ஆஜர்படுத்தப்படவுள்ள பந்த்ரா நீதிமன்றத்துக்குள் கோஷமிட்டபடி நுழைந்த அவரது 150 ஆதரவாளர்களை போலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ராஜ் கைதை எதிர்த்து புனே, நாசிக், சோலாபூர் ஆகிய நகர்களிலும் வன்முறை வெடித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் பல்வேறு ரயில் நிலையங்களும் சூறையாடப்பட்டு்ள்ளன.
நிருபர்கள் சந்திப்புக்கு தடை:
இந் நிலையில் வன்முறையைக் கிளப்பும் வகையில் பேசவோ, பத்திரிக்கையாளர்களை சந்திக்கவோ கூடாது என ராஜ் தாக்கரேவுக்கு மும்பை போலீஸ் தடை விதித்துள்ளது. இந்தத் தடை அடுத்த 2 மாதங்கள் அமலில் இருக்கும்.
நீதிமன்றத்தில் ராஜ்:
இந் நிலையில் இன்று பிற்பகலில் ராஜ் தாக்கரே மிக பலத்த பாதுகாப்புக்கு இடையோ பந்த்ரா நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் வாங்கடே முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவரை நவம்பர் 4ம் தேதி வரை இரண்டு வாரம் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். ஆனால், ஜாமீன் கோரி ராஜின் வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்து நீண்ட விவாதம் செய்யவே அவருக்கு ஜாமீன் வழங்கினார் மாஜிஸ்திரேட்.
இதையடுத்து கல்யாண் பகுதி போலீசார் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அதில், இதே போன்ற இன்னொரு வழக்கில் ராஜை கைது செய்ய வேண்டியுள்ளதால் அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டிருந்தது.
இதை ஏற்ற நீதிபதி ராஜ் தாக்கரேவை கல்யாண் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் மிக பலத்த பாதுகாப்புடன் அவர் மும்பை சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். நாளை கல்யாண பகுதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை அவர் சிறையில் தான் இருப்பார்.
இந்த வழக்கில் ராஜுக்கு எதிராக ஆஜராக ரோகினி சாலியான், மாஜி்த் மேமன் ஆகியோரை மாநில அரசு சிறப்பு வழக்கறிஞர்களாக நியமித்துள்ளது.
நீதிமன்றத்துக்கு ராஜ் தாக்கரே கொண்டு வரப்பட்டபோது அவரதச ஆதரவாளர்கள் சுமார் 2,000 பேர் நீதிமன்றத்தில் வெளியே பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். போலீசாரையும் தாக்கினர்.
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியதோடு கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசி கூட்டத்தைக் கலைத்தனர்.












Click it and Unblock the Notifications