Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'கரன்ட் கட்' தீபாவளி!

Subscribe to Oneindia Tamil

தீபாவளி என்றாலே வெளிச்சம், ஒளி, பிரகாசம், சந்தோஷம் என்பதுதான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் நாம் சந்தித்த சிலரோ இந்த தீபாவளி எங்களுக்கு 'கரன்ட் கட் தீபாவளி' என்று மனதில் இருந்ததைக் கொட்டினர்.

காரணம், தமிழகம் முழுவதும் நிலவி வரும் மின்சார தட்டுப்பாடுதான். எப்போது கரன்ட் போகும், எப்போது வரும் என்று தெரியாமலேயே நாட்களை நகர்த்தி வரும் நிலையில் வரும் இந்த தீபாவளி குறித்து மதுரை, கரூர், தேனி பகுதியைச் சேர்ந்த மக்கள் சிலரிடம் கருத்து கேட்டோம். அவர்கள் நம்மிடம் கொட்டியதை இங்கே பார்வைக்கு வைக்கிறோம்...

நாகராஜன்:

தீபாவளி என்பது தீப ஒளி தரும் நாள். ஆனால் தமிழக அரசு ஒரு நாளுக்கு ஒன்பது முறை மின்சாரத்தை கட் செய்கிறது. இதனால் தொழில்கள் நலிந்துவிட்டது. தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியவில்லை. போனஸ் கொடுக்க முடியவில்லை. எத்தனையோ தீபாவளியை நாங்கள் பார்த்துவிட்டோம். இந்த தீபாவளி மறக்க முடியாத தீபாவளியாகி விட்டது.

மணி:

நாங்கள் ஒவ்வொரு தீபாவளியின் போதும் ரூ.2,000 முதல் 3,000 வரை போனஸ் வாங்குவோம். ஆனால் இந்த தீபாவளிக்கு சம்பளம் கிடைத்தால் போதும் என உள்ளோம். காரணம் கரண்ட் கட்டால் வேலை கிடப்பதே அரிதாக உள்ளது. இந்த தீபாளிக்கு பதில் அடுத்த தீபாவளியை சிறப்பாக கொண்டாட வேண்டியது தான்.

சேகர்:

நான் டெக்ஸ்டைல்ஸ்களுக்கு காண்ராக்ட் மூலம் தொழிலாளர்களை சப்ளை செய்து வருகிறேன். ஒவ்வொரு தீபாவளியின் போதும் என்னிடம் ரூ.10,000 முதல் 15,000 வரை இருக்கும். ஆனால் இந்த தீபாவளிக்கு ரூ 2,000 கூட கையில் இல்லை. முதாலாளிகளுக்கு வருமானம் வந்தால் தானே தொழிலாளர்களுக்கு கொடுப்பார்கள். என்ன செய்வது என்றே தெரியவில்லை.

சுரேஷ்:

சார், விலைவாசி ஏறிப்போச்சு. ரூ 150 வாங்கிய துணிகள் ரூ 300 க்கு விற்கிறது. 500 ரூபாய்க்கு பட்டாசு வாங்கினால் பை நிறைந்து இருக்கும். ஆனால் இப்போ 500 ரூபாய்க்கு ஒரு சிறிய கேரி பேக்கில் தான் பட்டாசு வாங்கி வந்தேன். பலகாரம் செய்ய எண்ணெய் விலை ஏறிப்போச்சு. அதனால் வீட்டில் செய்ய முடியாது. சுவீட் கடையில் தான் ஒரு கிலோ ஸ்வீட் வாங்கி இந்த தீபாவளியை ஒப்பேத்த போகிறோம். அடுத்த தீபாவளி எப்படியினு பார்ப்போம்.

செல்வராஜ்:

தீபாவளி என்பது தமிழர்களுக்கான திருவிழா அல்ல. அது மக்களுக்கும் புரிவதில்லை. சொன்னாலும் யாரும் கேட்பதும் இல்லை. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பல நூறு ரூபாய்க்கு வெடியாக வாங்கி காசை கரியாக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது மட்டும் அல்ல. அரசு ஊழியர்களுக்கு மட்டும் அரசு போனஸ் தருகிறது. மக்களுக்கு அரசு என்ன செய்கிறது. தீபாவளி என்பது மூட நம்பிக்கையின் மொத்த உருவம்.

ராஜேந்திரன்:

சார், கையில் காசு இருந்தால் எப்பவுமே தீபாவளி தான். முன்பு பொழுது போக்கு சாதனங்கள் எதுவும் இல்லை. அதனால் தீபாவளி அன்றைக்கு அதை பொழுது போக்காக நினைத்து கொண்டாடினோம். இப்போது வீட்டில் டிவியில் புது நிகழ்ச்சி போட்டால் அது தான் தீபாவளி.

அக்கம் பக்கத்து வீட்டில் தீபாவளி அன்றைக்கு முறுக்கு, வடை, பாயாசம், அதிர்சம் போன்ற பலகராம் கொடுத்து பாசத்தை வளர்ப்போம். இப்போ வீட்டில் வெடி வைத்தால் கூட அடுத்த தெருவுக்காரன் எப்படிடா சத்தமாக பட்டாசு வெடிக்கலாம்னு சண்டைக்கு வாரான். ஆக தீபாவளி குழந்தைகளுக்கான ஒரு பண்டிகை. அவ்வளவு தான்.

விஜயராகவன்:

எங்கள் பகுதி விவசாய பகுதி. இங்கு மின்சாரம் இருந்தால் தான் விவசாயி நல்லா இருப்பான். இப்போ விவசாயமும் கெட்டுப்போச்சு, மின்சாரமும் இல்லாமல் போச்சு. கூலி தொழிலாளி என்ன செய்வான். குழந்தைகளுக்கு நல்ல டிரஸ், ஸ்வீட் வாங்கி கொடுத்து விட்டு அவங்க சந்தோசத்தை பார்த்து ரசிக்க வேண்டியது தான். தொழில்கள் நல்லா இருந்தால் தான் முதலாளி நல்லா இருக்க முடியும். முதலாளி நல்லா இருந்தால் தான் தொழிலாளி நல்லா இருக்க முடியும். தொழிலாளி நல்லா இருந்தால் அவன் குடும்பம் நல்லா இருக்கும். இப்ப என்ன நிலைமைன்னு உங்களுக்கே தெரியும்...

அசோக்குமார் மற்றும் முருகன்:

போன முறை மாதிரி இந்த தீபாவளி நல்லா இல்ல சார். காரணம் பண புழக்கம் இல்லை. முன்பு தீபாவளி அன்னிக்கு கையில் நிறைய பணம் இருக்கும். இப்போ இல்லை. நாங்க கார் ஓட்டுகிறோம். வண்டி ஒடி ரொம்ப நாள் ஆகுது. எதோ வீட்டில் குழந்தைகளுக்கு மட்டும் துணி எடுத்து கொடுத்தாச்சு. நமக்கு என்ன தீபாவளி. அவங்க சந்தோஷம் தானே நம்ப சந்தோஷம்.

கருப்பு:

பணக்காரர்களுக்கு மட்டும் தான் தீபாவளி. ஏழைகளுக்கெல்லாம் இல்லை. அதை நாம நினைத்து அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கனும். வட்டிக்கு பணம் வாங்கிதான் வீட்டுக்கு துணி எடுத்தேன். வட்டிக்கு பணம் வாங்க வேண்டும் என்றால் கூட 4 நாளுக்கு முன்பு சொன்னால் தான் பணம் கிடைக்குது. இப்படியே போனால் நாம இனிமேல் வாழவே முடியாது. நிலைமை இப்படி இருக்க இதைப் போய் எப்படி மகிழ்சியான தீபாவளின்னு சொல்ல முடியும்.

விஸ்வநாதன்:

முன்பெல்லாம் நமக்கு தீபாவளின்னா அது பண்டிகைன்னுதான் தெரியும். தீபாவளிக்கு தான் துணி எடுக்கணும், வெடி வெடிக்கனும், பலகாரம் செய்யனும் என்ற நிலை மாறிப் போச்சு. காரணம் இளைஞர்கள் பழமையை விட்டு புதுமைக்கு மாறிகிட்டு வருகிறான். இப்போ நாகரீகம் பெருத்து போச்சு. அதனால் அவனுக்கு தீபாவளி போன்ற பண்டிகையின் மீது இருந்த ஈர்ப்பு எல்லாம் போச்சு. விதவிதமாக செல்போன் வாங்கனும், கை நிறைய சம்பாதிக்கனும், காரில் போகவேண்டும் என்று இளைஞர்கள் எண்ணங்கள் ஹைடெக்காக மாறிபோச்சு. அதனால் தீபாவளி பண்டிகை ஒரு சடங்காக மாறிவிட்டது.

சண்முகசுந்தரம்:

இந்த தீபாவளிக்கு மக்களும் சரி, நாமும் சரி நல்லா சந்தோசமாக இருக்கோமானா அது தான் இல்லை. வெளியே போனால் தான் தெரியுது விலைவாசி. கேட்கவே பயமாக இருக்கு. குடும்பத்திற்கே 100 ரூபாய்க்கு பட்டாசு வாங்கிய காலம் மாறி இப்போ ஒருத்தருக்கு 1000 ரூபாய்க்கு பட்டாசு வாங்க வேண்டி இருக்கு. குழந்தைகள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று சிலர் நினைப்பதால் தான் தீபாவளி பண்டிகைன்னு ஒன்னு இருக்கு. இல்லாட்டி இதுவும் காலப் போக்கில் அழிந்து போயிருக்கும். துணி மணி, பட்டாசு, கறி விருந்துன்னு முன்பு எல்லாம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இப்போது அது எல்லாம் இல்லை. எதோ சடங்கிற்கு பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ரவி:

சார், நாங்க ரெயில்வே கூலிகள். முன்பு தீபாவளிவான சந்தோஷமாக இருக்கும். மற்ற நாளைவிட அன்னிக்கு பாக்கெட்டில் பணம் நிறைய இருக்கும். மதுரைக்கு மகாராஷ்டிராவில் இருந்து தான் நிறைய சுற்றுலா பயணிகள் வருவாங்க. ஏகத்துக்கும் பணம் கொடுப்பாங்க. இப்போ அங்கு கலவரம். அதனால் யாரும் மதுரை பக்கம் வரவே இல்லை. இதனால் நாங்க ரயிலை பார்த்து பார்த்து கண்கள் பூத்துபோச்சு. ஏதோ கொண்டாடுகிறோம்.

முருகன்:

சார், நான் ஆட்டோ டிரைவர், காலையில் இருந்து நாலு சவாரி கூட போகல. தீபாவளிக்கு கடைக்கு போகனும்னா முன்பு ஆட்டோவில் தான் மக்கள் போவாங்க. இப்போ நடந்தே போறாங்க. காரணம் மக்களிடம் காசு, பணம் புழக்காட்டம் குறைந்து போச்சு. அது தான் காரணம். இப்படி இருந்தால் வீட்டில் எப்படி சார் தீபாவளி கொண்டாட முடியும்.

ஆனந்த்:

போன தீபாவளி போல இந்த தீபாவளி சந்தோசமாக இல்லை. விலை வாசி ஏறிடுச்சு. துணி விலை, பட்டாசு விலை அதிகமாயிடு்ச்சு. எதையுமே ஒரு முறைக்கு பல முறை யோசிச்சு தான் செய்ய வேண்டி இருக்கு. தீபாவளி அன்றைக்கு மக்களுக்கு அரசு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் வரும் காலத்தில் குறைந்த விலையில் ரேஷன் கடையில் பட்டாசு விற்கலாம். எங்க பார்த்தாலும் ஒரே கொள்ளை, எப்படிங்க இதை எதுக்க முடியும்.

ராமநாதன்:

நாங்க, தீபாவளிக்கு எப்பவுமே சந்தோஷமாக தான் கொண்டாடுவோம். தீபாவளிக்குத் தான் பார்க்க முடியாத நண்பர்களை கூட பார்க்க முடியும். மனம் விட்டு பேச முடியும். வீட்டில் உள்ள பெரியவர்கள் கிட்ட ஆசி வாங்க முடியும். நம்ப மனம் எண்ண சொல்லுதோ அது தான் முடிவு. எண்ணங்கள் தானே வாழ்க்கை. அப்படி இருக்க நாம அடுத்தவர்களை குறை சொல்லுவதோ, அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு செயல்படுவதோ கூடாது. தீபாவளி பண்டியை அன்னிக்கு நாம் மட்டும் அல்ல மக்களும் சந்தோஷமாக இருக்கனும். அது தான் என் ஆசை.

மோகன்:

சார், முன்பு இருந்ததை விட இப்போ மக்கள் நல்லா தான் இருக்காங்க. முன்பு ஊரில் 10 பணக்கார்கள் தான் இருப்பாங்க. இப்போ ஊருக்கு 100 பணக்காரங்க இருக்காங்க. கஷ்டப்பட்டு உழைத்தால் யாருக்கும் பணம் கிடைக்கும். அதை திட்டமிட்டு செலவு செய்ய பழகி கொள்ள வேண்டும். கையில் பணம் கிடைக்கும் போது அதை செலவு செய்து விட்டு தீபாவளிக்கு அன்றைக்கு புலம்புவது அர்த்தமற்ற புலம்பல். மக்கள் கிட்ட இப்போ வாங்கும் சக்தி கூடி இருக்கு. அதனால் இந்த தீபாவளி நல்ல தீபாவளி தான்.

மக்கள் மனங்கள் இப்படி இருந்தாலும், இந்த சோகத்தையும், குமுறல்களையும் மாற்றும் திருநாளாக தீபாவளி அமையட்டும் என வாழ்த்துவோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+