பாஸில் ராஜபக்சேயுடன் சந்திப்பு- கருணாநிதியிடம் பிரணாப் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

Pranab
டெல்லி: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் தம்பி பாஸில் ராஜபக்சே இன்று டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது தமிழர்களின் உயிர் இழப்புகள் தவிர்க்கப்படும் என இலங்கை உறுதியளித்தது.

மேலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு இந்திய மருத்துவ உதவி கிடைக்கவும் அனுமதிக்கப்படும் என இலங்கை தெரிவித்துள்ளது.

கருணாநிதியை சந்திக்க முகர்ஜி விரைவு:

இந்த சந்திப்பையடுத்து பிரணாப் முகர்ஜி உடனே சென்னை கிளம்பினார். மாலை 4 மணிக்கு அவர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து இலங்கை தரப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை குறித்து விளக்கவுள்ளார்.

அப்போது இலங்கை அரசு தந்துள்ள உறுதிமொழிகள் குறித்து கருணாநிதியிடம் பிரணாப் விளக்கமளிப்பார்.

கருணாநிதியுடன் சோனியா பேச்சு:

இந் நிலையில் இலங்கை தரப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதல்வர் கருணாநிதியுடன் தொலைபேசியில் விளக்கினார்.

அப்போது இலங்கை விவகாரத்தில் சோனியா காட்டும் தீவிரத்துக்கு கருணாநிதி நன்றி தெரிவித்ததோடு இலங்கையில் போரை நிறுத்துமாறு இலங்கை தரப்பை நெருக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

மீண்டும் பேச்சு:

சென்னையில் கருணாநிதியை சந்தித்து விளக்கம் தந்தபின் பிரணாப் முகர்ஜி மீண்டும் டெல்லி திரும்பும் மீண்டும் பாஸில் ராஜபக்சேவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் கூட்டறிக்கை வெளியிடவுள்ளனர்.

ராஜபக்சே உறுதிமொழி:

முன்னதாக பாஸில் தலைமையிலான குழு நேற்றிரவு டெல்லி வந்தது. இன்று காலை மூத்த அதிகாரிகள் புடைசூழ டெல்லி செளத் பிளாக்கில் உள்ள வெளியுறவுத்துறை கட்டடத்தில் பாஸிலும் முகர்ஜியும் பேச்சுவார்த்தை நடந்தினர்.

அப்போது அதிபர் ராஜபக்சேவின் கடிதத்தையும் முகர்ஜியிடம் பாஸில் அளித்தார்.

அதில், தமிழர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும். இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு வழங்கும் மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை ஏற்றுக் கொள்ளத் தயார்.

சண்டையால் இடம்பெயர்ந்த இரண்டரை லட்சம் அகதிகளுக்கு, இருப்பிட வசதி செய்து கொடுக்கத் தயார். தமிழர்களின் நலன்கள் முழு அளவில் பாதுகாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் நிருபர்களிடம் பேசிய பாஸில்,

பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. இலங்கை நிலவரத்தை பிரணாப் முகர்ஜியிடம் விரிவாக விளக்கினேன். மீண்டும் சந்தித்துப் பேசவுள்ளோம். போரில் தமிழர்கள் உயிரிழப்பது, பாதிக்கப்படுவது குறித்து இந்திய தரப்பு கேள்வி எழுப்பியது.

தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக உறுதிமொழி தந்தோம். மேலும் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு இந்திய மருத்துவ உதவி கிடைக்கச் செய்வது குறித்தும் பேசினோம் என்றார்.

மேலும் இந்த இலங்கை குழுவினர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோரையும் சந்தித்து பேசுகிறது.

திமுக ராஜினாமா வாபஸ்?:

இதற்கிடையே, இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் ஓரளவுக்கு திருப்தியளிக்கும் வகையில் இருப்பதாக முதல்வர் கருணாநிதி நேற்று அறிவித்தார்.

இந் நிலையில் இலங்கை தூதுக் குழுவிடம் இந்தியா பெற்றுள்ள உறுதிமொழிகள் திருப்தியளிக்கும் பட்சத்தில் அனைத்து எம்பிக்களும் ராஜினாமா செய்யும் முடிவை திமுக வாபஸ் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

சோனியா-முகர்ஜியுடன் பாலு சந்திப்பு:

முன்னதாக இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு நேற்றிரவு சந்தித்துப் பேசினார்.

வரும் 28ம் தேதிக்குள் இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக எம்பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இலங்கை குழுவிடம் முகர்ஜி பேச வேண்டிய விஷயங்கள் என்று கூறி முதல்வர் கருணாநிதி தெரிவித்த யோசனைகளையும் பாலு முன் வைத்ததாகத் தெரிகிறது.

மேலும் இலங்கை பிரச்சினை தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தன்னிச்சையாக கருத்து தெரிவித்து வருவதைத் தடுக்க வேண்டும் என்றும் சோனியாவிடம் பாலு கோரியதாகத் தெரிகிறது.

பின்னர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்த பாலு, இலங்கை விஷயத்தில் மத்திய அரசு கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+