நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு விட்டது-எதியூரப்பா
பெங்களூர்: நடுவர் மன்றத்தின் தீர்ப்பின்படி காவிரியில் தமிழகத்துக்கு விட வேண்டிய தண்ணீர் முற்றிலும் திறந்துவிடப்பட்டு விட்டதாக கர்நாடக முதல்வர் எதியூரப்பா கூறியுள்ளார்.
பெங்களூரில் நிருபர்களிடம் அவர் பேசுகையி்ல்,
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து இருக்கிறது. இதனால் கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகள் நிரம்பி வழிகின்றன. காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பின்படி இந்த வருடம் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் திறந்து விடவேண்டிய தண்ணீர் முழுவதும் விடப்பட்டு விட்டது.
கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும், ஹைதராபாத் கர்நாடக பகுதிக்கு 317வது விதியை திருத்தி சிறப்பு வாய்ப்புகளை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தி வரும் 4ம் தேதி டெல்லிக்கு காங்கிரஸ், ஜனதா தளம, பாஜக கட்சியைச் சேர்ந்த எம்பி, எம்எல்ஏக்களை அழைத்துச் செல்கிறேன்.
இதில் நான் எந்த அரசியலும் செய்யவில்லை. எதிர்க்கட்சியினர் இந்த பணியில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
வரும் 4ம் தேதி விதான செளதாவில் பாஜக தலைவர் அத்வானியின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தக வெளியீட்டு விழா நடக்கிறது என்றார் எதியூரப்பா.
தமிழக கோவிலில் எதியூரப்பா யாகம்:
இதற்கிடையே தனது அரசியல் எதிரிகளை வீழ்த்த எதியூரப்பா, தஞ்சாவூர் மாவட்டம் அய்யாவாடியில் உள்ள ப்ருத்யங்கரா தேவி கோவிலில் இன்று மகா யாகம் நடத்துகிறார்.
கும்பகோணம் அருகே அய்யாவாடியில் ப்ருத்யங்கரா தேவி கோவில் உள்ளது. எதிரிகளை வீழ்த்த அமாவாசை தோறும் இங்கு நடக்கும் நிகும்பலா யாகத்தில் பலர் கலந்து கொள்வதுண்டு.
இந் நிலையில் எதியூரப்பாவுக்காக இன்று நிகும்பலா யாகம் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க நேற்று அவர் தனி விமானத்தில் தஞ்சாவூர் விமானப்படை தளத்துக்கு வந்தார்.
அங்கிருந்து கார் மூலம் தஞ்சைக்கு வந்த அவரிடம், குண்டுவெடிப்பு வழக்கில் பெண் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து கேட்டதற்கு, அதைக் கேட்பதற்கான நேரம் இதுவல்ல. ஹேப்பி தீபாவளி என்று கூறி விட்டுப் போய்விட்டார்.
மாலையில் கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் சிவாலயம் சென்ற அவர் பின்னர் சூரியனார் கோவிலுக்கும் சென்றார்.
இன்று ப்ருத்யங்கரா தேவி கோவிலில் நடக்கும் நிகும்பலா யாகத்தில் பங்கேற்கிறார்.
மேட்டூர் அணையிலிருந்து மீண்டும் நீர் திறப்பு:
இந் நிலையில் கர்நாடகத்தில் பெய்யும் பலத்த மழையால் கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டதாலும் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாகவும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் கடும் மழையால் பாசனப் பகுதிகளுக்கு போதிய நீர் கிடைத்ததால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது 21ம் தேதி நிறுத்தப்பட்டது.
குடிநீர் தேவைக்காக மட்டும் 25ம் தேதி முதல் வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
கடந்த 2 நாட்களாக காவிரி டெல்டா மாவட்டங்களில் பருவ மழையின் தீவிரம் குறைந்துவிட்டதால் மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை 6 மணி முதல் மீண்டும் பாசனத்திற்காக 10,400 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications