நாடகம் போடும் கருணாநிதி பதவி விலக தந்தி அனுப்புங்கள்-ஜெ
சென்னை: இலங்கை பிரச்சனையில் நாடகம் நடத்தி வரும் கருணாநிதியை பதவி விலகச் சொல்லி மக்கள் தந்தி அனுப்ப வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையில் தலையிட்டு அங்கு அமைதியை ஏற்படுத்துவது சாத்தியமில்லை என முதல்வர் கருணாநிதியிடம் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறிவிட்டார்.
இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிட முடியாது என்பதை அறியாதவராக இருக்கிறார் கருணாநிதி.
பிரணாப் முகர்ஜியுடனான சந்திப்புக்குப் பின் இலங்கை பிரச்சனையில் இதற்கு மேல் ஒன்றுமே செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்து தமது கட்சி எம்பிக்கள் அளித்த ராஜினாமா கடிதங்களை அப்படியே தன்வசம் வைத்துக் கொண்டார் கருணாநிதி.
இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி வராமல் தவிர்த்துவிட்டார்.
இதற்குப் பரிகாரமாக திமுக அரசை தாங்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திமுகவுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள் என்று காங்கிரஸ் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவைத் தலைவரிடம் தராமல் தனது தந்தையான கருணாநிதியிடும் கொடுத்துள்ளார்.
இந்த நாடகத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று அன்றை நான் கணித்துவிட்டேன்.
இலங்கையில் போரால் வீடுகளை இழந்து இடம் பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களையும் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையும் மறந்துவிட்டார் கருணாநிதி.
பள்ளிச் சீருடையில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கட்டாயப்படுத்தப்பட்டு மழையில் நிற்க வைக்கப்பட்டு மனித சங்கிலி நடத்தியதையும் மறந்துவிட்டார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வெளிப்படையாக கருத்துக்களைத் தெரிவித்து அதற்காக இப்போது சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் திரைப்படத்துறையினர். அவர்களையும் மறந்துவிட்டார்.
இதனால் கருணாநிதிக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் நாடகங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டே இருப்பார்.
மத்திய ஆட்சியில் இருப்பவர்களும் கருணாநிதி நடத்தும் நாடகத்தின் துணை நடிகர்கள் தான்.
எனவே கருணாநிதியை பதவி விலகச் சொல்லி அவருக்கு தமிழக மக்கள் தந்தி அனுப்ப வேண்டும். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர் உணர வேண்டு்ம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
அதிமுகவினர் தந்தி:
ஜெயலலிதாவின் அறிவிப்பையடுத்து இன்று தமிழகம் முழுவதும் ஏராளமான அதிமுகவினர் தந்தி அலுவலகங்களில் குவிந்தனர்.
முதல்வர் கருணாநிதி பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கான தந்திகளை அனுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications