Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போர் நிறுத்தத்திற்கு நாங்கள் தயார்: விடுதலைப் புலிகள்

Subscribe to Oneindia Tamil

Natesan
கிளிநொச்சி: போர் நிறுத்தத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொள்கிறோம் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் பி.நடேசன் கூறுகையில், நாங்கள் எப்போதும் போர் நிறுத்தத்தையே வலியுறுத்தி வந்துள்ளோம். அந்த நிலையில் எங்களிடம் மாற்றமோ அல்லது தயக்கமோ இல்லை.

உண்மையில் இலங்கை அரசுதான் போர் நிறுத்தத்தை ஒரு தலைபட்சமாக முறித்துப் போட்டது. தமிழ் மக்கள் மீது இலங்கை ஆவேசப் போரை தொடுத்துள்ளது. அதை தடுத்து மட்டுமே வருகிறோம் நாங்கள்.

போர் நிறுத்தத்தை நாங்கள் ஒருபோதும் மீறியதில்லை. அதை தொடர்ந்து உறுதியுடன் கடைப்பிடித்து வந்தோம் என்று கூறியுள்ளார் நடேசன்.

முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன், விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் குறித்த தங்களது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக குமுதம் வார இதழுக்கு நடேசன் அளித்திருந்த ஒரு பேட்டியில், ஈழத் தமிழர்களுக்கு எப்போதெல்லாம் இன்னல்கள் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் அவற்றுக்கு ஜனநாயக ரீதியில் முதல்வர் கருணாநிதி உதவி வருவதாக கூறியிருந்தார்.

பேட்டியின் சாராம்சம் ...

சிறிலங்கா இராணுவம் முன்னேறி வரும் நிலையிலும் விடுதலைப் புலிகள் தரப்பில் முற்று முழுதாக இன்னும் யுத்தத்தில் குதிக்கவில்லையென்று சொல்லப்படுகிறது. இந்தப் பின்வாங்கலுக்கு என்ன காரணம்?

பா.நடேசன்: எமது மக்களைப் பாதுகாப்பதற்காக நாம் எவ்வாறான தியாகங்களையும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றோம். எமது இயக்கம் ஓர் விடுதலை இயக்கம். அரச படைகளுக்கு எதிராகப் போராடுகின்றோம். காலநேரம் வரும்போது சரியான பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்ற இந்தியாவின் கோரிக்கைக்குப் பிறகு, சிறிலங்கா ராணுவத்தின் குண்டுவீச்சு குறைந்திருக்கிறதா?

பா.நடேசன்: நேற்றும் இன்றும்கூட கிளிநொச்சிப் பிரதேசத்திலுள்ள குடிமனைகள் மீது சரமாரியான பீரங்கித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏராளமான வீடுகள் அழிந்து நாசமாகியுள்ளன. ஒரு குடும்பத்தில் தந்தையும் தனயனும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த சூழலில் இந்தியாவிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

பா.நடேசன்: இலங்கைக்கான இராணுவ உதவிகளை நிறுத்தி, எமது இயக்கத்தின் மீதான தடையை நீக்கி, எம்மை அங்கீகரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் இருந்ததைப் போன்ற ஓர் ஆதரவு நிலை இப்பொழுது மீண்டும் தமிழகத்தில் உருவாகியுள்ளதா?

பா.நடேசன்: தமிழீழ மக்களும் தமிழக மக்களும் ஒரே குடும்பத்தவர்கள். தொப்புள் கொடி உறவுகள் போன்றவர்கள். எமக்கொன்றென்றால் தமிழகம் கொதித்தெழும். இன உணர்வு தமிழகத்தில் நீறுபூத்த நெருப்பாக இருந்து வருகின்றது. இன்று ஈழத்தில் சிறிலங்காவின் அரச படைகள் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புப்போரை மேற்கொள்ளும்போது அதற்கு எதிராக தமிழக மக்கள் கொதித்தெழுந்துள்ளார்கள். இதுவே யதார்த்தம்.

தமிழகத்தில் உருவாகியுள்ள இந்த ஆதரவு நிலை ஈழப் போராட்டத்துக்கு எந்த வகையில் உதவியாக இருக்கும்?

பா.நடேசன்: தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை முழு இந்திய மக்களும் அரசியல் தலைமைகளும் புரிந்துகொண்டு எமக்கு ஆதரவாக வருவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

வைகோ, அமீர், சீமான் ஆகியோர் உங்களை ஆதரித்ததற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்களே. ஈழ ஆதரவு நிலைப்பாடு தமிழக கூட்டணி அரசியலில் மாற்றங்களை உருவாக்கும் போலிருக்கிறதே?

பா.நடேசன்: தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஒரே அணியின் கீழ் அணி திரள்வதையே நாம் விரும்புகின்றோம். தமிழக உள்ளூர் அரசியலுக்குள் தலையிடாமல் இருப்பதே எமது கொள்கையாகும். தமிழர்கள் என்ற ரீதியில் எல்லோரையும் அரவணைத்துச் செல்வதையே நாம் விரும்புகின்றோம்.

மூத்த தமிழ் அரசியல்வாதியாகவும் தமிழக முதல்வராகவும் ஈழப் போராட்டத்தில் கலைஞரின் செயல்பாடுகள் குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன?

பா.நடேசன்: கலைஞர் எமக்கு தந்தை போன்றவர். இன உணர்வு மிக்கவர். தமிழர்கள் எல்லோரும் சுயமரியாதையோடு வாழவேண்டும் என்பதில் அக்கறையுள்ளவர். ஈழத் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்ட போதெல்லாம் என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனை பணிகளையும் ஜனநாயக வழியில் செய்து வருகிறார்.

நீங்கள் ஜெயலலிதாவை கொலை செய்யக் குறி வைத்திருப்பதாகவும், அதனால்தான் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறாரே?

பா.நடேசன்: இவ்வாறான கருத்துகளும் பிரசாரங்களும் எமக்கெதிரான சக்திகளால், தமிழக அரசியல் தலைமைகளை எமக்கெதிராக திருப்பிவிடும் நோக்கில் உருவாக்கப்பட்ட கட்டுக்கதையாகும். இவ்வாறான புனை கதைகளை கேட்கும்பொழுது எமக்கு மிகவும் வேதனையாகவும், துன்பமாகவும் இருக்கின்றது. இவ்வாறான புனை கதைகளை உருவாக்க வேண்டாமென சம்பந்தப்பட்ட தரப்பினரை மிகவும் அன்பாக கேட்டுக்கொள்கின்றோம் என்று அவர் கூறியுள்ளார்.


More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+