பொருளாதார நெருக்கடி-உஷார் நடவடிக்கைகளில் டாடா
டெல்லி: உலகப் பொருளாதாரத்தை இறுக்கி வரும் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, டாடா குழுமம் செலவுகளைக் குறைக்கும் வேலைகளில் இறங்கியுள்ளது. விரிவாக்கத் திட்டங்கள், புதிய நிறுவனங்களை வாங்கும் பணிகள் உள்ளிட்டவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் அது முடிவு செய்துள்ளது.
உலக அளவில் பொருளாதார நெருக்கடி விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த நெருக்கடியில் சிக்கி பல வங்கிகள் திவாலாகியுள்ளன.
இந்த நெருக்கடியை சமாளிக்க தொழில் நிறுவனங்கள், ஆள் குறைப்பு, சம்பளக் குறைப்பு, சிக்கண நடவடிக்கைள் என இறங்கி விட்டன.
இந்த நிலையில் டாடா குழுமமும் பல்வேறு சிக்கண நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளில் இறங்கியுள்ளது.
முதல் கட்டமாக செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைளில் அது இறங்கியுள்ளது.
டாடா குழுமத்தின் வசம் உள்ள 98 நிறுவனங்களின் மேலாளர்களுக்கும் நவம்பர் 6ம் தேதி டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா இ மெயில் மூலம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி நீங்கும் வரையில், விரிவாக்கத் திட்டங்களை மெதுவாக செயல்படுத்துவது, தேவையில்லாவிட்டால் நிறுத்தி வைப்பது, புதிய நிறுவனங்களை கையகப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது, சிக்கண நடவடிக்கைளை கடைப்பிடிப்பது என்ற முக்கிய முடிவுகளை ரத்தன் டாடா பரிந்துரைத்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், என்னென்ன செய்யலாம் என்ற யோசனைகளையும் தனக்கு அனுப்புமாறும் அனைத்து நிறுவன நிர்வாகிகளையும் ரத்தன் டாடா கேட்டுள்ளார்.
மேலும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தேவையான நிதி, வர்த்தக திட்டங்கள் ஆகியவற்றைத் தெரிவிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் நிறுவனத்தையும், அதில் பணியாற்றும் ஊழியர்களையும் காக்கவே. வாடிக்கையாளர்களுக்கு இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ரத்தன் டாடா தனது நிறுவன அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
டாடா நிறுவனம் இந்த ஆண்டு இரு பெரும் வெளிநாட்டு நிறுவனங்களை பெரும் விலை கொடுத்து கையகப்படுத்தியது. முதலில் இங்கிலாந்தைச் சேர்ந்த சொகுசுக் கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் மற்றும் லேன்ட் ரோவரை 2.3 பில்லியன் டாலருக்கு டாடா நிறுவனம் கையகப்படுத்தியது.
இதையடுத்து டச்சு நிறுவனமான கோரஸ் ஸ்டீல் நிறுவனத்தை 13.7 பில்லியன் டாலர் விலை கொடுத்து டாடா குழுமம் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
