லேஹ்மன் பிரதர்ஸ் மீது ஊழியர்கள் வழக்கு!
டெல்லி: சமீபத்தில் திவாலான லேஹ்மன் பிரதர்ஸ் வங்கி உரிய முன்னறிவிப்பு தராமல் தங்களை வேலையை விட்டு நீக்கியதை எதிர்த்து, அந்த வங்கியின் முன்னாள் ஊழியர்கள் 100 பேர் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மன்ஹாட்டனைத் தலமையிடமாகக் கொண்டு இயங்கும் லேஹ்மன் பிரதர்ஸ் வங்கியின் அனைத்துக் கிளைகளிலும் 25 ஆயிரம் பணியாளர்கள் இருந்தனர்.
ஆனால் சர்வதேச நிதி நெருக்கடி மற்றும் வங்கிக்கு ஏற்பட்ட வராக் கடன்களைக் காரணம் காட்டி, திவால் நோட்டீஸ் கொடுத்துவிட்டது லேஹ்மன் பிரதர்ஸ்.
இதனால் பல ஆயிரம் பணியாளர்கள் திடீரென வேலையை இழந்தனர்.
இப்போது பாதிக்கப்பட்ட பணியாளர்களில் 100 பேர் சார்பாக மிரான் பேரன்ஷ்டேயன் என்ற கம்ப்யூட்டர் புரோகிராமர் நியூயார்க் கோர்ட்டில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
வேலையை விட்டு நீக்குவதற்கு முன் அனைத்துப் பணியாளர்களுக்கும் வங்கி விதிமுறைப்படி 60 நாள் நோட்டீசு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் வங்கி அதைச் செய்யத் தவறிவிட்டது.
இன்னொரு பக்கம் பணியாளர்களுக்குச் சேரவேண்டிய விடுமுறைக்கால ஊதியம் உள்ளிட்ட பல உரிமைகளை அப்படியே விட்டுவிட்டது. இவற்றை உடனடியாக வழங்க வேண்டும், என அந்த வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளார் மிரான் பேரன்ஷ்டேயன்.
இதற்கான இழப்பீடாக பெரும் தொகை ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications