பெங்களூர்: தமிழக சாப்ட்வேர் என்ஜினியர் பெண் கொலை-கணவர் கைது

சென்னையைச் சேர்ந்தவரான மனோஜ்குமார்-லட்சுமி ஆகியோருக்கு 4 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இருவரும் ஒரே சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.
சமீபத்தில் இருவரும் பெங்களூருக்கு மாற்றலாகி வந்தனர். இருவரும் வெவ்வேறு சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிக்கு சேர்ந்தனர். எச்ஏஎல் வினாயக நகர் பகுதியில் தங்கியிருந்தனர்.
கடந்த 7ம் தேதி விடுமுறை போட்டுவிட்டு வீட்டில் இருந்த லட்சுமி கொலையாகிக் கிடந்தார்.
முகத்தில் மிளகாய் பொடி தூவப்பட்ட நிலையில், இரும்புக் கம்பியால் தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார். வீட்டில் இருந்த நகைகள், ரூ. 30,000 பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தன.
இது குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கணவர் மனோஜ் குமார் மீதே சந்தேகம் வரவே அவருடைய அலுவலகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது 7ம் தேதி அவர் 3 மணி நேரம் அலுவலகத்தை விட்டு வெளியே போய்விட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரிக்க வேண்டிய வகையில் விசாரித்தபோது உண்மையைக் கக்கினார்.
அதன் விவரம்:
திருமணத்துக்கு முன் பெங்களூரில் வசித்த மனோஜ் குமாருக்கும் பெங்களூர் சி.வி.ராமன் நகரைச் சேர்ந்த அனுராதா ரெட்டி என்பவருக்கும் காதல் இருந்து வந்தது. இந் நிலையில் தனது பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் லட்சுமியை திருமணம் செய்து கொண்டார்.
ஆனாலும் அனுராதா ரெட்டியுடன் இவரது காதல் தொடர்ந்தது. இத்தனைக்கும் அனுராதாவுககும் திருமணமாகிவிட்டது. ஆனால், அவர் தனது கணவரிடமிருந்து பிரிந்து டைவர்ஸ் கேட்டு வழக்குப் போட்டுள்ளார்.
இதையடுத்து லட்சுமியை கொலை செய்துவிட்டு அனுராதாவை திருமணம் செய்யத் திட்டமிட்டார் மனோஜ்.
இதற்காக சென்னையிலிருந்து திட்டமிட்டே பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்தார். மனைவியையும் பெங்களூரில் பணியில் சேர வைத்தார்.
கடந்த 7ம் தேதி அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்து மனைவி மீது மிளகாய்ப் பொடியைத் தூவிவிட்டு நிலை குலைய வைத்து இரும்புக் கம்பியால் தலையில் அடித்துக் கொலை செய்தார்.
நகை, பணத்தையும், இரும்புக் கம்பியையும் ஒரு துணியில் சுற்றி வீட்டுக்கு சிறிது தூரத்தில் ஒரு புதரில் போட்டு வைத்தார்.
பின்னர் அலுவலகம் திரும்பிவிட்டார். மாலையில் வீட்டுக்கு வந்தபோது மனைவி கொலையாகிக் கிடப்பதாக கதை கட்டினார்.
அவர் தந்த தகவலின் பேரில் ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கம்பி, கையுறைகள் போன்ற பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.












Click it and Unblock the Notifications