ராஜ் தாக்கரே மீண்டும் கைது- ஜாமீன்
மும்பை: பிகார் மக்கள் கொண்டாடும் சாத் பூஜை குறித்து விமர்சித்துப் பேசியதாக ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் நீதிமன்றத்தில் பதிவான வழக்குத் தொடர்பாக மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே இன்று மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து மும்பை போதிவாடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தானே ஜாம்ஷெட்பூருக்கு சென்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவாதாகவும், தன்னை போலீஸ் காவலில் அனுப்ப வேண்டாம் என்றும் கோரி மனு தாக்கல் செய்தார்.
இதை ஏற்ற நீதிமன்றம் அவருக்கு ஜாம்ஷெட்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும் வகையில் 'டிரான்சிட் பெயில்' (ஜாமீன்) வழங்கியது. இதையடுத்து அவர் 17ம் தேதி ஜாம்ஷெட்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
இந்த டிரான்சிட் பெயில் கிடைத்திருக்காவிட்டால் அவர் மும்பை போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார். அவர்களே அவரை ஜாம்ஷெட்பூர் கொண்டு சென்று ஆஜர்படுத்தியிருப்பர்.
முன்னதாக இந்த வழக்குத் தொடர்பாக ராஜை கைது செய்து ஆஜர்படுத்துமாறு ஜாம்ஷெட்பூர் நீதிமன்றம் மும்பை போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து ராஜே இன்று போதிவாடா நீதிமன்றத்தில் சரணடைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் சரணடையவில்லை. இதையடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.












Click it and Unblock the Notifications