மிரட்டல் இருப்பதாக ஜோடித்தவர் ஜெ: துரைமுருகன்
சென்னை: தனக்கு முன்னும், பின்னும் போலீஸ் போக வேண்டும் என்பதற்காகவே, தனக்கு மிரட்டல் இருப்பதாக ஜோடித்தவர் தான் ஜெயலலிதா என அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டினார்.
தமிழக சட்டசபையில் துணை நிதி நிலை அறிக்கை மீது நடந்த விவாதம்:
ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): கடந்த 50, 60 ஆண்டுகாலமாக இல்லாத விலைவாசி உயர்வு காரணமாக இப்போது, ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மொத்த மின் நிறுவு திறனாகிய 10,011 மெகாவாட்டில், நமது மொத்த தேவை போக உபரியாக இருந்த 1,236 மெகாவாட் மின்சாரத்தை, அண்டை மாநிலங்களுக்கு விற்று வருவாய் ஈட்டினோம்.
ஆனால், கடந்த 29 மாத கால திமுக ஆட்சியில் கடுமையான மின் பற்றாக்குறை நிலவுகிறது. பெரும்பாலான இடங்களில் 20 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவுகிறது.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி: நீங்கள் சொன்ன மொத்த மின் நிறுவு திறனில் 2,200 மெகாவாட் மின்சாரம் நீர் மின் நிலையங்களில் இருந்து கிடைப்பது. அது 6 மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதையெல்லாம் கணக்கில் கொள்ளக்கூடாது. கடந்த 2 ஆண்டுகளில் மின் தேவை 1,200 மெகாவாட் கூடுதலாகியுள்ளது. தற்போது, 7,500 மெகாவாட் மின் உற்பத்தி திட்டங்கள் தீட்டப்பட்டு இருக்கின்றன.
பன்னீர்செல்வம்: அதிமுக ஆட்சி காலத்தில் 1,662 மெகாவாட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் பெறப்பட்டது. இந்தியாவிலேயே காற்றாலை மின்சாரத்தில் தமிழகம் சிறந்து விளங்கியது. அனல் மின் நிலையத்தில் இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் இப்போது கிடைக்கவில்லை. மத்திய அரசிடம் கேட்டு ஏன் மின்சாரத்தை பெற முடியவில்லை?. திமுக ஆட்சியில் 2,500 மெகாவாட் மின் இழப்பு ஏற்பட்டுள்ளது. அனல் மின் நிலையங்கள் பழுதாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிகார மையத்தினர் குடும்பத்தார் கைகாட்டும் நிறுவனங்கள் மூலமாக, பிடிசி மற்றும் எம்எம்டிசி மூலம் தரக் குறைவான நிலக்கரி இறக்குமதி செய்ததில் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஆற்காடு வீராசாமி: நீங்கள் சொல்லும் எம்எம்டிசி மற்றும் பிடிசி ஆகியவை மத்திய அரசு நிறுவனங்கள்தான். இதன் மூலம் நிலக்கரி வாங்குவதில் யாருக்கும் லஞ்சம் தர முடியாது.
பன்னீர்செல்வம்: இது தவறான தகவல். வெப்பத்திறன் குறைவால் மின் உற்பத்தி பாதித்துள்ளது. மேட்டூரில் ஒரு யூனிட் ஒரு மாதமாக பழுதுபட்டுள்ளது. மின்சார வாரியம் திவாலாகிவிட்டது.
ஆற்காடு வீராசாமி: மேட்டூர் மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். அங்கு முழு அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இன்றைய ரிப்போர்ட் என் கையில் உள்ளது.
பன்னீர்செல்வம்: அமைச்சர் நேற்று, அம்மா (ஜெயலலிதா) வீட்டு மின் கட்டணம் அதிகம் என்று சொன்னார். அவர், ஒரு கட்சியின் பொதுச் செயலாளர். எதிர்கட்சித் தலைவர். அங்கு அலுவலகமும் உள்ளது. உதவியாளர்கள் இருப்பார்கள். இசட் பிளஸ் பாதுகாப்பு அவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அங்கு மின்விளக்கு எப்போதும் எரிய வேண்டிய சூழல் உள்ளது.
ஆற்காடு வீராசாமி: 20 மணி நேரம் மின்சாரம் இல்லை என்று போராட்டம் நடத்துகிறீர்கள். அப்படி இருக்கும்போது ஒரே ஒரு வீட்டில் மட்டும் இவ்வளவு பில் வருமா என்று தான் கேட்டேன்.
பன்னீர்செல்வம்: சொந்த பணத்தில்தான் கரண்ட் பில் கட்டுகிறார்கள். உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது கத்தி வீசியதாக ஒரு வழக்கு ஜோடிக்கப்பட்டு அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறதே. அது அரசின் செலவில்தானே செய்யப்பட்டிருக்கிறது.
அமைச்சர் துரைமுருகன்: தனக்கு முன்னும், பின்னும் போலீஸ் போக வேண்டும் என்பதற்காகவே, தனக்கு மிரட்டல் இருப்பதாக ஜோடித்தவர் தான் ஜெயலலிதா.
பன்னீர்செல்வம்: அமைச்சர் ஸ்டாலின் மீது கத்தி வீசியது யார்?
துரைமுருகன்: ஜெயலலிதாவை மிரட்டியது யார்?
பன்னீர்செல்வம்: உயிருக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். எதிர்கட்சியா? ஆளுங்கட்சியா என்று பார்க்கக்கூடாது. மின்சார அமைச்சர் சொன்னதற்கு பதில் சொல்லும் வகையில்தான் ஸ்டாலின் பற்றி பேசவேண்டிய நிலை ஏற்பட்டது.
அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நடந்த வன்முறை வெறியாட்டத்தை காவல்துறையினர் 10 அடி தூரத்தில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்தார்கள். இது மன்னிக்க முடியாத செயல். இதற்கு 29 கால ஆட்சியின் மெத்தனப்போக்கே காரணம். அந்த சம்பவம் நடக்கும்போது, நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அதிகாரிகளிடமிருந்து போலீசாருக்கு தகவல் வந்ததாகத் தெரிகிறது. இது, இதுவரை நடக்காத அக்கிரம செயலாகும். போலீஸ் கண்முன்னே நடந்தது வெட்கக்கேடு. காவல்துறையில் உளவுத்துறை உள்ளதா? செயலிழந்து விட்டதா? இந்த சம்பவம் நடக்கும்போது...
அமைச்சர் துரைமுருகன்: இந்தப் பிரச்சனை பற்றி ஏற்கனவே பேசியாகிவிட்டது. இது பற்றி விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அதை திரும்பத் திரும்ப எழுதி படிப்பது என்ன நியாயம்.
பன்னீர்செல்வம்: ஓகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு ஜப்பான் நிதி உதவி செய்வதை தடுத்து நிறுத்தப் போவதாக கர்நாடகத்தில் உள்ளவர்கள் சவால் விட்டுள்ளார்கள். தமிழக அரசு என்ன செய்யப் போகிறது. நகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டல் விடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அமைச்சர் மு.க.ஸ்டாலின்: நகராட்சிகளுக்கு மிரட்டல் என்பது தவறான தகவல். அந்தந்த நகராட்சியே சொத்து வரியை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
பன்னீர்செல்வம்: உங்கள் ஆதரவில் தான் மத்திய அரசே இருக்கிறது. வேண்டியதை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய நீங்கள் கோரிக்கை வைப்பது வேடிக்கையாக உள்ளது. மத்திய அரசு என்ற தேரில் தமிழக மந்திரிகள் உல்லாசப் பயணம் சென்று கொண்டிருக்கிறார்கள்.
காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சனம்: மத்திய அமைச்சர்கள் உல்லாசப் பயணம் போகவில்லை. நீங்கள் ஆட்சியில் இருந்தபோது உல்லாசப் பயணம் போனீர்களா? தமிழகத்தில் மட்டும் விலைவாசி உயரவில்லை. உலகின் பல நாடுகளிலும் விலைவாசி உயர்ந்துள்ளது. அதை 'ஜீபூம்பா' போட்டு குறைக்க முடியாது.
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்:- ஜெயலலிதா கூடத்தான் ஊட்டியில் 5 மாதம் உல்லாச பயணம் போனார். (இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்).
செங்கோட்டையன்: உங்களவர் (முதல்வர் கருணாநிதி) கூட குன்னூருக்கு கதை எழுத போகவில்லையா?
சபாநாயகர்: நீங்கள் ஒருவரை கை காட்டினால், மற்ற 3 விரல்களை நம்மை பார்ப்பதை உணர வேண்டும் என்றார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.












Click it and Unblock the Notifications