3 குழந்தைகளை எரித்து தாயும் தற்கொலை
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 3 குழந்தைகளை எரித்துக் கொன்று விட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று இரவு நடந்த இந்த துயர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தை சேர்ந்த மனோகரனின் மனைவி பொற்கொடி (28). இவர்களது குழந்தைகள் சந்தோஷ் ( 3), டெய்சிராணி (2), தயாநிதி (6 மாத குழந்தை).
மனோகரன் மளிகை கடை நடத்தி வருகிறார். மனோகரனுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதை பொற்கொடி கண்டித்ததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந் நிலையில் மனோகரன் வெளியே கிளம்பினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே பொற்கொடியை திட்டிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார் மனேகாரன்.
இதனால் மனமுடைந்து பொற்கொடி தனது 3 குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு தானும் தீயில் எரிந்தார். இதில் அவர்களது குடிசை வீடும் பற்றி எரிந்தது.
இதில் நால்வருமே பலியாயினர்.
தற்கொலைக்கு துண்டியதாக மனோகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications