மேடைகளில் யாரையும் புகழ்ந்து பேசக் கூடாது: ஜெ.
சென்னை: அதிமுக பொதுக்கூட்டங்களில் மாவட்டங்களைச் சேர்ந்த எந்த ஒரு தனி நபரையும் புகழ்ந்து பேசக்கூடாது என அதிமுகவினருக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
மக்களுக்கு புரிகின்ற வகையில் நாட்டு நிகழ்வுகளை திறம்பட தலைமைக் கழக பேச்சாளர்களால் தான் எடுத்துச் சொல்ல முடியும். ஆனால், அதிமுக பொதுக் கூட்டங்களில் உரையாற்றுபவர்கள் தலைமைக் கழக பேச்சாளர்கள் பட்டியலில் இல்லாதவர்கள் என்ற தகவல்கள் எனக்கு வந்துள்ளன. இது தவிர்க்கப்பட வேண்டும்.
பொதுக்கூட்டங்களில் அன்றைய கூட்டத்திற்கு தலைமை ஏற்பவரையோ அல்லது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவரையோ அல்லது கழகத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகளையோ புகழும் பேச்சுக்கள் தான் அதிகமாக கேட்கமுடிகிறது என்று எனக்கு தெரிவித்த வண்ணம் உள்ளனர். இது விரும்பத்தகாத ஒன்றாகும்.
பேச்சாளர்கள் திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து கூறுவதோடு கழக ஆட்சியில் மக்களுக்காக செய்துள்ள நன்மை களையும், செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களையும் கூட்டங்களில் எடுத்துக் கூற வேண்டும்.
எனவே, இனிவரும் காலங்களில் கழக பொதுக் கூட்டங்களில் உரையாற்றுபவர்கள் திமுக அரசின் மக்கள் விரோத செயல்கள் பற்றியும், கழக ஆட்சியின் சாதனைகளை பற்றியும் மட்டுமே பேசவேண்டும்.
அதைவிடுத்து அவரவர் மாவட்டங்களைச் சார்ந்த தனிநபர்களை பற்றி புகழ்ந்து பேசக்கூடாது. இனிமேல் யாராவது அவ்வாறு பேசினால் அதன் விவரங்களை எனக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications