என்க்கு ஓட்டு போடாதீர்கள்-இப்படியும் ஒரு வேட்பாளர்
ஜெய்ப்பூர்: ஒவ்வொரு ஓட்டையும் விடாமல் பெற வேட்பாளர்களுக்குள் முண்டியடி நடக்கும் நிலையில் ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர், தனக்கு ஓட்டு முக்கியமல்ல என கோரி பிரசாரம் செய்து வருகிறார்.
அந்த வித்தியாசமான வேட்பாளரின் பெயர் சத்யபால் பிஷ்னாய். ஸ்ரீகங்காநகர் சட்டசபைத் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர் தனக்கு ஓட்டுப் போடுவதை விட தான் சொல்வதை வாக்காளர்கள் தயவு செய்து கவனித்தால் போதும் என்று கூறி பிரசாரம் செய்கிறார்.
இவர் சப்ரி தேசிய இயக்கம் என்ற அமைப்பின் உறுப்பினர் ஆவார். தீண்டாமைக் கொடுமை, பெண்களுக்கு அதிகாரம் உள்ளிட்டவை குறித்து தனது தேர்தல் பிரசாரத்தின்போது இவர் பேசி வருகிறார். மேலும், பாகிஸ்தான் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் 54 இந்தியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரி வருகிறார்.
தீண்டாமைக் கொடுமை குறித்து அவர் கூறுகையில், தலித் மக்கள் இன்னும் சமூகத்தில் உரிய இடத்தைப் பெறாமல் ஓரம் கட்டப்பட்ட நிலையிலேயே இருக்கிறார்கள். பிற ஜாதியினர் மேற்கொள்ளும் பழக்க வழக்கங்களை செய்ய விடாமல் தடுக்கப்படுகின்றனர்.
சட்டமும், அதை அமல்படுத்த வேண்டியவர்களும் தீண்டாமைக் கொடுமையை தடுக்கத் தவறி விட்டனர். அரசியல் தலைவர்கள் நினைத்தால் தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க முடியும். இதுகுறித்து அவர்கள் அக்கறை செலுத்த வேண்டும்.
இதை எனது பிரசாரத்தின்போது எடுத்து வைக்கிறேன்.
இதேபோல, இந்தியாவில் பிரசவத்தின்போது இறக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. மேலும், பெண் சிசுக் கொலையும் குறைந்தபாடில்லை. பெண்களுக்கு எதிரான பாரபட்சப் போக்கே இதற்குக் காரணம்.
கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரத்தில் பெண்களுக்கு சம அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்கிறார் பிஷ்னாய்.
எனது பிரசாரத்தின்போது மக்களிடம் இதைத்தான் நான் வலியுறுத்துகிறேன். ஓட்டு வாங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஓட்டுப் போட வேண்டாம், நான் சொல்வதை கேட்டு விழிப்புணர்ச்சி பெற்றால் போதும் என்கிறார் பிஷ்னாய்.


Click it and Unblock the Notifications
