ஜெ.வுடன் பரதன் சந்தி்ப்பு-கூட்டணி குறித்து ஆலோசனை

காங்கிரஸ், திமுகவுடன் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ள இடதுசாரிகள் வருகிற லோக்சபா தேர்தலில் மாற்று அணிக்கு மாற தயாராகி விட்டனர்.
இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அவருடன் தா.பாண்டின், சுதாகர் ரெட்டி எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. அதன் பின்னர் வெளியே வந்த ஏ.பி.பரதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைவதற்கான அறிகுறிகள் பிரகாசமாக உள்ளன.
நட்பு முறையிலும், இதயப்பூர்வமான முறையிலும் இந்த சந்திப்பு இருந்தது. தமிழக மற்றும் தேசிய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தோம் என்றார்.
இடதுசாரிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஜெயலலிதா விருப்பம் தெரிவித்தாரா என்ற கேள்விக்கு, உண்மையில் எங்களை சந்திக்க அழைத்தது ஜெயலலிதாதான். அவரது அழைப்பின் பேரில்தான் வந்தோம். விருப்பம் இல்லாமல் அவர் எங்களை அழைத்திருப்பாரா?. ஜெயலலிதா அழைப்பின் பேரில்தான் நான் வந்து அவரை சந்தித்தேன் என்றார்.
இருந்தாலும் விடாத செய்தியாளர்கள், கூட்டணி குறித்து ஜெயலலிதா விருப்பத்தை வெளிப்படையாக சொன்னாரா என்று கேட்டபோது, அதை உங்களது முடிவுக்கே விட்டு விடுகிறேன் என்றார் பரதன். தொடர்ந்து அவர் கூறுகையில், அதிமுகவுடன் கூட்டணி குறித்து இறுதி செய்யும்போது எங்களுடன் சிபிஎம்மும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
நவம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் டெல்லியில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ கூட்டம் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படும் என்பது குறித்து எனக்குத் தெரியாது. அதை நான் கணிக்கவும் முடியாது. அப்படி செய்வதும் தவறு.
கூட்டணி அமைப்பது குறித்து முடிவு செய்ய இன்னும் நிறைய கால அவகாசம் உள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் திமுக நீடிப்பதால் அவர்களுடன் இடதுசாரிகள் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை என்றார் பரதன்.
ஜெயலலிதாவை, பரதன் சந்தித்துப் பேசியுள்ளது தமிழக அரசியல் களத்தை மீண்டும் சூடாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications