வீட்டில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுப்பு
தூத்துக்குடி: கொன்று புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் பச்சிளம் குழந்தையின் உடல் மருத்துவ பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது.
தூத்துக்குடி மாப்பிள்ளயூரணியை சேர்ந்தவர் கோமதி. இவருக்கு கடந்த 16ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு முதுகில் கட்டியும், தலை மற்றும் தோள் பகுதி பெருத்தும் காணப்பட்டது.
இக்குழந்தையை வளர்க்க இஷ்டமின்றி அதை கோமதி மருத்துவமனையிலேயே விட்டுச் சென்றார். இதை கண்ட மருத்துவமனை ஊழியர்கள் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து குழந்தையை எடுத்துக் கொண்டு கோமதி வீட்டிற்கு சென்றார். இதனிடையே கடந்த 21ம் தேதி அந்தக் குழந்தை இறந்தது. குழந்தையை கோமதி அவரது தாயார், தாயாரின் சகோதரி ஆகியோர் 22ம் தேதி வீட்டின் பின்பகுதியிலேயே குழி தோண்டி புதைத்துவிட்டனர்.
குழந்தையை கோமதியும், அவரது தாயாரும் சேர்ந்து கொன்று புதைத்து விட்டதாக தகவல்கள் பரவியது.
தகவல் அறிந்ததும் தாளமுத்து நகர் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாசம் விசாரணை நடத்தினார். குறைபாடுகளுடன் பிறந்த குழந்தை இறந்துவிட்டதால் வீட்டின் பின்பகுதியில் புதைத்து விட்டதாக கோமதி தெரிவித்தார்.
இதையடுத்து புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் ஆர்டிஓ முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. டாக்டர் செல்வராஜ் குழந்தையின் உடலை பரிசோதனை செய்தார். பின்னர் குழந்தையின் உடல் மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே குழந்தை இறப்புக்கு தாயார் தான் காரணமா என்பது தெரிய வரும். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications