தங்கம் தான் தினமும் குறையுதே.. இப்போ வாங்கலாமா.. அய்யய்யோ அத மட்டும் பண்ணாதீங்க பாஸ்.. ஏன்?
தங்கம் இந்திய மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சொல், ஆண், பெண்கள் பேதம் இல்லாமல் விரும்பும் ஒரு விஷயமாக இருக்கும் தங்கம் கடந்த சில ஆண்டுகளாக ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, தற்போது சற்று நிதானிக்கத் தொடங்கியுள்ளது.
உண்மையில் இந்த நிதானம் தான் மக்கள் மத்தியில் புதிய பீதியை உருவாக்கியுள்ளது. தங்கம் விலை இன்னும் குறைந்தால் ஏற்கனவே வாங்கியவர்களுக்கு பிரச்சனை.. தங்கம் விலை உயர்ந்தால் இதுவரை வாங்காமல் இருப்பவர்களுக்கு பிரச்சனை.. சரி தங்கம் விலை அப்படியே இருந்தால் இனி மாற்றம் இல்லாத சொத்தில் ஏன் வாங்க வேண்டும் என் கவலை..

இப்படி பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் சுற்றிக்கொண்டு இருக்கும் மக்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இந்த செய்தி ஒரு முக்கியமான புரிதலை கொடுக்கும். உலகளாவிய மத்திய வங்கிகளின் தொடர் கொள்முதல் காரணமாக தங்கம் விலை 2025ல் இருந்து தொடர்ந்து உயர்ந்து 2026 ஜனவரி 29ஆம் தேதி இந்திய சந்தையில் 18,328 ரூபாய் வரையில் உயர்ந்தது.
ஆனால் இந்த உயர்வை தொட்ட பின்பு 2026-ம் ஆண்டில் மந்தமான போக்கைக் காட்டி வருகிறது. இதனால், "தங்கத்தின் மீதான மும்முரம் முடிவுக்கு வந்துவிட்டதா? இனி தங்கம் விலை குறையுமா?" என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
தற்போதைய சந்தை நிலவரப்படி, புதிய உலகளாவிய அரசியல் அல்லது பொருளாதார மாற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டால் ஒழிய, தங்கத்தின் விலை அதிரடியாக உயர்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதனால் கடந்த 1 மாதமாக 14000-15600 வரையில் சுற்றி சுற்றி ஓடிக்கொண்டு இருக்கிறது.
சரி தங்கம் மந்த நிலைக்கு செல்ல என்ன காரணம் என்பதை முதலில் புரிந்துக்கொண்டால் மட்டுமே தங்கத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என தெரிந்துக்கொள்ள முடியும்.

உலக நாடுகளின் 'டி-டாலரைசேஷன்' வியூகம்
அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்கும் நோக்கில் உலக நாடுகள் எடுத்து வரும் 'டி-டாலரைசேஷன்' (De-Dollarization) எனப்படும் டாலர் தவிர்ப்பு கொள்கையே கடந்த சில ஆண்டுகளாக தங்கம் விலை உயர்ந்ததற்கு மிக முக்கியக் காரணமாகும். குறிப்பாக, உக்ரைன் போரின் போது ரஷ்யாவின் சுமார் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்நியச் செலாவணி சொத்துக்களை மேற்கத்திய நாடுகள் முடக்கிய சம்பவத்திற்குப் பிறகு, இந்த நிலைப்பாடு தீவிரமடைந்தது.
டாலராகச் சேமித்து வைத்தால் எப்போது வேண்டுமானாலும் மற்றொரு அரசால் அது முடக்கப்படலாம் அல்லது தடைகளுக்கு உள்ளாகலாம் என்பதை உலக நாடுகள் உணர்ந்தன. ஆனால், தங்கத்தை அவ்வாறு எந்தவொரு வெளிநாட்டு அரசாங்கத்தாலும் முடக்கவோ, தடைகள் விதிக்கவோ அல்லது அதன் மதிப்பைக் குறைக்கவோ முடியாது என்பதால், உலக நாடுகள் தங்கள் நிதிச் சுதந்திரத்தைப் பாதுகாக்க தங்கத்தை ஒரு பாதுகாப்பான அரணாகத் தேர்வு செய்தன.
இதனால் வெளிநாட்டில் தங்கம் வாங்கினாலும் தாய் நாட்டிற்கு உடனடியாக கொண்டு வரும் போக்கு தொடர்ந்தது.

மத்திய வங்கிகளின் தங்கம் கொள்முதல்
இந்த டி-டாலரைசேஷன் கொள்கையின் ஒரு பகுதியாக, இந்தியா, சீனா மற்றும் பல வளர்ந்து வரும் நாடுகள் கடந்த 2020 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மிக தீவிரமாக தங்கத்தைக் கொள்முதல் செய்தன.
உலக அளவில் 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் தலா 1,037 டன்களும், 2025-ல் சுமார் 1,100 டன்களும் தங்கம் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், 2026-ம் ஆண்டில் இந்த வேகம் கணிசமாகக் குறைந்து, இதுவரை 244 டன்கள் மட்டுமே மத்திய வங்கிகளால் வாங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாடும் தங்களின் நடுத்தரக் காலத் தேவைக்கான அதிகபட்சத் தங்கத்தை ஏற்கனவே வாங்கி, தங்களின் இருப்புநிலைக் குறிப்பில் (Balance Sheet) கட்டமைப்பு ரீதியான மாற்றங்களைச் செய்து முடித்துவிட்டன. இத்தகைய பெரிய மாற்றங்களை ஒவ்வொரு ஆண்டும் செய்ய முடியாது என்பதால், தற்போது கொள்முதல் வேகம் குறைந்துள்ளது.
இருப்பினும், தங்கம் சந்தை முற்றிலும் சரிந்துவிடவில்லை, ஏனெனில் பிரேசில் (2025-ல் மீண்டும் நுழைந்தது), கஜகஸ்தான் (வரலாற்றுச் சாதனை அளவிலான கொள்முதல்), குவாட்டமாலா, இந்தோனேசியா, மலேசியா போன்ற புதிய நாடுகள் தற்போதும் தங்கத்தைத் தொடர்ந்து தங்களின் இருப்பில் சேர்த்து வருகின்றன.

அமெரிக்கா ஏன் தங்கம் வாங்குவதில்லை?
உலக நாடுகள் அனைத்தும் தங்கத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்கா இந்த தங்கம் வாங்கும் போட்டியில் கலந்து கொள்ளவே இல்லை. அதற்குக் காரணம், அமெரிக்காவிடம் ஏற்கனவே சுமார் 8,133 டன்கள் தங்கம் இருப்பு உள்ளது.
இந்த அளவு இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த தங்கம் இருப்பை விட பல மடங்கு அதிகம் என்பதால், அந்நாட்டு நாணய மதிப்பு குறைப்பு அபாயங்களுக்கு எதிராக அமெரிக்கா ஏற்கனவே முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு புதிதாக தங்கம் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.

இந்தியர்களின் கவனத்திற்கு
இந்தியப் பின்னணியில், சாமானிய மக்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரை தங்கம் ஒரு தவிர்க்க முடியாத சொத்தாகவே பார்க்கின்றனர். தற்போதைய சூழலில், தங்கம் என்பது உங்களின் சொத்தின் மதிப்பைத் தக்கவைக்கும் (Wealth Protection) ஒரு கருவியே தவிர, அது பன்மடங்கு லாபத்தைத் தரும் ஒரு வளர்ச்சிச் சொத்து (Growth Asset) அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பங்குகள் அல்லது பாண்டுகளைப் போல (Equities or Bonds) தங்கத்திற்கு என்று தனிப்பட்ட வட்டி போன்ற வருவாய் (Native Yield) எதுவும் கிடையாது. இதனால், அமெரிக்கப் பெருநிறுவனங்கள், பிரைவேட் ஈக்விட்டி (PE) அல்லது வென்ச்சர் கேபிட்டல் (VC) நிதிகள் போன்ற பெரிய அளவிலான லெவரேஜ் முதலீட்டுக் கருவிகள் (Leveraged Instruments) தங்கத்தின் மீது உருவாக்கப்படுவது மிகக் குறைவு.
அவ்வாறு பெரிய நிறுவனங்களின் ஆதரவு உலக அளவில் பெருமளவில் கிடைத்தால் ஒழிய, தங்கம் முன்போல அசுர வேகத்தில் மீண்டும் உயராது. இல்லையெனில் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி அல்லது போர் போன்ற இக்கட்டான சூழ்நிலை வந்தால் மட்டுமே முதலீட்டு சந்தை தங்கத்திற்கு மாறி அதன் விலை உயரும். இல்லையெனில் வாய்ப்பு மிகவும் குறைவு.
மக்கள் செய்ய வேண்டியது என்ன..?
முதல் விஷயம் தங்கம் ஒரு நீண்ட கால சொத்து, இன்று வாங்கி அடுத்த 3 மாதத்தில் லாபம் பார்த்து விற்றுவிடலாம் என திட்டமிட்டால், வாய்ப்பு மிகவும் குறைவு.
எனவே முதலீட்டாளர்கள் உங்களின் ஒட்டுமொத்த முதலீட்டுத் தொகுப்பில் (Portfolio) தங்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதில் எவ்விதமான மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு வளர்ச்சி சார்ந்த அல்லது அதிகப்படியான வளர்ச்சியை எதிர்நோக்கும் முதலீட்டாளராக (Growth Investor) இருந்தால், உங்களின் மொத்த முதலீட்டில் 25 சதவீதத்திற்கு மேல் தங்கத்தில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
தங்கம் விலையில் சரிவுகள் (Dips) ஏற்படும் போதெல்லாம், சிறுகச் சிறுக வாங்கிச் சேமிப்பதே சாமானிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு நீண்ட கால அடிப்படையில் சிறந்த பாதுகாப்பையும், பலன் தரும். இதனால் தங்கம் விலை உயர்வது உறுதி, ஆனால் இது எப்போது, எவ்வளவு உயரும் என்பது கணிப்பது இப்போதைய சூழ்நிலையில் கடினம்.












Click it and Unblock the Notifications