திருத்தணி கோயிலில்.. திடீரென மாயமான 10 சவரன் தங்க தாலி! சாமி ஆடி கொண்டு வந்த பூசாரி!
சென்னை: திருத்தணியில் கோயில் திருவிழாவில், சாமி சிலைக்கு அணிவித்திருந்த 10 சவரன் தங்க தாலி காணாமல் போயிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தியபோது.. திடீரென பெண் பூசாரி சாமி ஆடி நகையை எடுத்து கொடுத்திருக்கிறார்.
காணாமல் போன நகை, போலீஸ் விசாரணையின் போது திடீரென கிடைத்தது எப்படி? என்று ஊர் மக்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இந்த சம்பவம் திருத்தணி முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யனேரி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டும் விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. திரௌபதி அம்மன் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 10 சவரன் தங்க தாலி அணிவிக்கப்பட்டிருந்தது.
திருவிழாவுக்கு வந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர். இப்படி இருக்கையில் மதியம் நேரத்தில் பக்தர்களின் வருகை குறைவாக இருந்த சமயத்தில் அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 10 சவரன் தங்க தாலி காணாமல் போயிருக்கிறது. எங்கு தேடியும் தாலி கிடைக்காததால் பக்தர்களும், கோயில் நிர்வாக குழுவினரும் கடும் அதிருப்தியடைந்தனர்.
இதையடுத்து நிர்வாக குழுவினர் உள்ளூர் போலீசாருக்கு புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. அதாவது, போலீசார் ஒவ்வொருவராக விசாரித்துக்கொண்டு கோயிலின் பெண் பூசாரியிடம் வந்தனர். அப்போது சாமி வந்தது போல ஆடிய பெண் பூசாரி, கோயில் கருவறைக்குள் ஓடி சென்றார். என்ன நடக்கிறது என்று புரியாமல் போலீசாரும், பக்தர்களும் சில நொடிகளுக்கு அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டனர்.
கருவறைக்குள் ஓடிய பெண் பூசாரி மகேஸ்வரி.. அதே வேகத்தில் வெளியில் ஓடி வந்து.. தாலி கிடைத்துவிட்டது என்று அதை கூட்டத்தினர் காட்டியிருக்கிறார். உடனே பக்தர்களும் கோவிந்தா.. கோவிந்தா.. என்று முழக்கமிட்டனர்.
உண்மையில் தாலி எப்படி காணாமல் போனது? யார் அதை எடுத்தது? மீண்டும் பெண் பூசாரி கைக்கு அந்த தாலி எப்படி வந்தது? என பக்தர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இந்த சம்பவம் திருத்தணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications
