டெண்டரில் முறைகேடா.. மின் பற்றாக்குறையை ரூ.34,000 கோடியாக குறைத்தது திமுக.. செந்தில் பாலாஜி பதிலடி!
சென்னை: தங்களுக்கு வசதியாக மின்சாரத் துறை தொடர்பான வெள்ளை அறிக்கையை தவெக அரசு வெளியிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். திமுக ஆட்சியில் மின்சாரத் துறையினர் வருவாய் பற்றாக்குறையை ரூ.34 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளதாக கூறிய செந்தில் பாலாஜி, டெண்டர் வழங்கப்பட்டதில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மின்சாரத் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், மின்சாரத் துறையின் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதன்படி, மின்சார வாரியத்திற்கு தற்போது ரூ.2,47,130 கோடி கடன் உள்ளது. பணியாளர்கள் பற்றாக்குறை, கட்டமைப்புகளில் கவனம் செலுத்தவில்லை என்று ஏராளமான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

இதற்கு முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 2021ல் திமுக ஆட்சிக்கு வரும் போதே மின் வாரியத்தில் ரூ.1.59 லட்சம் கோடி கடன் இருந்தது. அதிமுக ஆட்சியில் ரூ.58,534 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறையை, திமுக ஆட்சியின் முடிவில் ரூ.34,447 கோடியாக குறைத்துள்ளோம்.
ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை கணிசமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் கொள்முதல் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். வெளி மாநிலங்களில் மின்சாரம் வாங்கியதால் செலவு ஏற்பட்டது. இதனை ஏன் வெள்ளை அறிக்கையில் சொல்லவில்லை? பல தகவல்களை மறைத்து அவர்களுக்கு வசதியாக வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் நடந்த திட்டங்களை வெள்ளை அறிக்கையில் பட்டியலிட்டு பேசியுள்ளனர். மின்சார துறையில் வாங்கிய கடனுக்கு கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.75 ஆயிரம் கோடி வட்டியாக கட்டியுள்ளோம். மின் தேவைக்கு ஏற்ப மின்சார கொள்முதல் மற்றும் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தவெக அரசின் வசதிக்காக வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
நலிவடைந்து கிடந்த மின்சாரத் துறையை போதுமான நிதி ஒதுக்கி காப்பாற்றியவர் ஸ்டாலின். திமுக ஆட்சியில் தடையின்றி மின்சார விநியோகம் செய்யப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மின்சாரத் துறையின் வருவாய் ரூ.1.77 லட்சம் கோடியாக உயர்ந்தது. அதேபோல் அதிமுக ஆட்சியில் 3 கட்டங்களாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
அதிமுக ஆட்சியுடன் ஒப்பிட்டால் வருவாய் பற்றாக்குறையை கணிசமாக குறைத்துள்ளோம். சிக்கனமான நடவடிக்கையால் ஆண்டுக்கு ரூ.1,200 கோடி சேமித்தோம். அதேபோல் கோடைக்கால மின் பற்றாக்குறைக்கு ஏற்ப ஒரு வாரத்தேவை, ஒரு மாத தேவை என தேவைக்கேற்ப மின்சாரம் வாங்கப்பட்டது. அதனை கூடுதல் விலை கொடுத்து வாங்கவில்லை. டெண்டர் படி தான் வாங்கினோம். டெண்டர் ஒதுக்கியதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications