தொடர்ந்து பலத்த மழை - தத்தளிக்கும் தமிழகம் - இன்றும் விடுமுறை

வடக்கு இலங்கை அருகே நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வலுவடைந்துள்ளதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
நேற்று மாலை முதல் விடிய விடிய மழை பெய்தது. காலை 8 மணி நிலவரப்படி பல மாவட்டங்களில் மழை நிற்கவில்லை.
தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ..
தலைநகர் சென்னையில் விடிய விடிய பெய்த மழையால் நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. சாலைகள் பெரும்பாலானவற்றில் வெள்ள நீர் ஓடிக் கொண்டிருப்பதால் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் ரயில்கள் வருவது, போவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
சுரங்கப் பாதைகளில் தண்ணீர் பெருமளவில் தேங்கியிருப்பதால் அவற்றை மோட்டார் வைத்து அகற்றி வருகின்றனர்.
சென்னை விமான நிலைய ஓடு பாதையில் தண்ணீர் புகுந்துள்ளதால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் ...
தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக அங்கு மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது. கூடவே சூறாவளிக் காற்றும் வீசியதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு்ளது.
நவம்பர் 20ம் தேதி முதல் இதுவரை 88570 மில்லி மீட்டர் மழை காவிரி டெல்டா மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாம். இதில் தஞ்சையில் மட்டும் 440 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
மழை நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகம் கூறுகையில், தஞ்சையில் 40 வீடுகள் மழையால் சேதமடைந்துள்ளன. கும்பகோணத்தில் 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். வேறு சாவுகள் ஏதும் இல்லை.
லூர்து நகரில் 20 வீடுகள் மழையால் சேதமடைந்தன. அங்கு தங்கியிருந்தோர் தென் கிழக்கு கோட்டை பகுதியில் உள்ள நகராட்சிப் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றார்.
இதற்கிடையே திருவையாறு அருகே உள்ள அந்தளி கிராமத்தில், கோனகுண்டலாரின் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் வசித்து வருவோர் வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
4 மீனவர்களைக் காணவில்லை
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டணத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்று காணாமல் போயுள்ளனர்.
மணி, சங்கர், செல்வராஜ், மருது ஆகிய நான்கு மீனவர்களும் கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது அவர்களைக் காணவில்லை. மழையில் அவர்கள் சிக்கிக் கொண்டார்களா அல்லது இலங்கைக் கடற்படையினர் பிடித்துக் கொண்டனரா என்று தெரியவில்லை.
அவர்களுடன் மீன் பிடிககப் போன மற்ற மீனவர்கள் 24ம் தேதியே திரும்பி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
50 படகுகள் சேதம்
இதற்கிடையே சூறாவளி காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 50 விசைப் படகுகள் சேதமடைந்துள்ளன. பல நாட்டுப் படகுகளும் சேதமடைந்துள்ளன.
ராமேஸ்வரம் துறைமுகம், திருப்பாலைக்குடி, பாம்பன், தொண்டி, மண்டபம், கீழக்கரை, தேவிப்பட்டணம் ஆகிய பகுதிகளில் இந்த படகுகள் சேதமைடந்துள்ளன.
ராட்சத அலைகள் தாக்கி இவை சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். பல படகுகள் பழுதுபார்க்க முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில் பாம்பன், வடக்கு சின்னப்பாலம், மஹமதியாபுரம், குண்டக்கல், தெற்குவாடி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ரயில்கள் ரத்து:
தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல இடங்களில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியதால் ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் இன்று 2வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
தேர்வுகள் ஒத்திவைப்பு
தொடர் மழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று முதல் தொடங்குவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை
மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே காவிரி டெல்டா மாவட்டங்களிலும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications
