செக்யூரிட்டி டெபாசிட்-ஐடி நிறுவனத்தின் மெகா மோசடி
சென்னை: சென்னையில், செக்யூரிட்டி டெபாசிட் என்ற பெயரில், சாப்டவேர் என்ஜீனியர்களிடம் கோடிக்கணக்கில் மாபெரும் மோசடி நடந்துள்ளது.
சீட்டுக் கம்பெனி நடத்தி பண மோசடி நடத்துவதை நாம் நேரில் பார்த்திருக்கிறோம், நம்மில் சிலர் ஏமாற்றத்திற்கும் ஆளாகியிருப்பார்கள்.
அதேபோல எம்.எல்.எம் என்ற பெயரில் நடந்த மோசடிகளையும் நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். சிவகாசி ஜெயலட்சுமி கூட அப்படி ஒரு மோசடியை அந்தக் காலத்தில் நடத்தியவர்தான்.
ஆனால் யாருமே கேள்விப்பட்டிராத, புதுசான ஒரு மோசடி சென்னையில் நடந்துள்ளது. இதில் ஏமாந்து போனவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, சாப்ட்வேர் என்ஜீனியர்கள் என்பதுதான் மிகப் பெரிய சோகம்.
சென்னையைச் சேர்ந்த ஒரு ஐடி நிறுவனம் செக்யூரிட்டி டெபாசிட் என்ற பெயரில், சாப்ட்வேர் என்ஜீனியர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த அந்த ஐடி நிறுவனம், 400க்கும் மேற்பட்ட இளம் பட்டதாரிகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு வேலை தருவதாக உறுதியளித்துள்ளது. இதை நம்பிய அவர்களிடம், செக்யூரிட்டி டெபாசிட் என்ற பெயரில் தலா ரூ. 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளனர். அவ்வளவுதான் பணத்தை வசூலித்து விட்டு அந்த நிறுவனத்தினர் எஸ்கேப் ஆகி விட்டனர்.
இந்த மோசடியில் சிக்கி ஏமாந்து போனவர்கள் அனைவருமே புதிதாதக படிப்பை முடித்து விட்டு வந்த இளம் என்ஜீனியரிங் பட்டதாரிகள். இவர்களை மோசடி நிறுவனம் அணுகியபோது, உங்களுக்கு திருவனந்தபுரத்தி்ல ஆறு மாதம் பயிற்சி தரப்படும். 2 ஆண்டுகளுக்கு எங்களிடம்தான் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எப்படியெல்லாம் பேசினால் நம்புவார்களோ அந்த தோரணையில் பேசி 400க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி பட்டை நாம் போட்டுள்ளது அந்த ஐடி நிறுவனம்.
இந்த மோசடியில் சிக்கி ஏமாந்து போன ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர் கூறுகையில், எனக்கு முதலில் ரூ. 11,000 சம்பளம் கிடைக்கும், அது அப்படியே கூடிக் கொண்டே போய் ரூ. 20 ஆயிரம் வரை கிடைக்கும் என்றனர். நம்பி கொடுத்தேன். இப்படி ஏமாற்றி விட்டார்கள் என்றார்.
இன்னொருவர் கூறுகையில், 15 நாட்கள்தான் எங்களுக்குப் பயிற்சி கொடுத்தனர். அதுவும் மகா மட்டமாக இருந்தது. பயிற்சியாளர் சரியில்லை, ஆளை மாற்றுங்கள் என்று நாங்கள் கோரியிருந்தோம். ஆனால் அதற்குள் கம்பெனியையே காணவில்லை என்றார் சோகத்துடன்.
இந்த மோசடியில் சிக்கி ஏமாந்து போயுள்ள என்ஜீனியர்கள் அனைவருமே தமிழகம், கேரளா மற்றும் ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த 2ம் நிலை, 3ம் நிலை நகரங்களைச் சேர்ந்தவர்கள்.
டெபாசிட் கட்டுவதற்காக பணத்தை கடன் வாங்கிக் கொடுத்தவர்கள் ஏராளமாக உள்ளன். இப்போது கடன் கொடுத்தவர்கள் நெருக்க ஆரம்பித்துள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கிப் போயுள்ளனர் இவர்கள்.
இந்த மோசடியில் ஈடுபட்டதாக அருண் குமார் ராமையா, ஜாகிர் உசேன், சசி ஆகியோர் மீது போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. அவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications
