வெள்ளக் காடான சென்னை-வீடுகளுக்குள் தண்ணீர், மின்சாரம் இல்லை

நேற்று மாலை 5 மணி முதல் இரவு முழுவதும் நகரில் இடைவிடாது மழை பெய்தது. இன்று காலையும் மழை தொடர்ந்து கொண்டிருப்பதால் சென்னை நகர் முழுவதும் சாலைகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது.
பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. கோயம்பேடு, சின்மையாநகர் தியாகராநகர் அபிபுல்லா சாலை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கொளத்தூர், அம்பத்தூர், மேல் அயனம்பாக்கம், புரசைவாக்கம், மில்லர் சாலை, வேளச்சேரி, மடிப்பாக்கம், ராம்நகர், சதாசிவ நகர், பேபி நகர், கீழ்கட்டளை ஆகிய இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர் போன்ற பலத்த காற்றில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. வேளச்சேரி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது.
மிதக்கும் வட சென்னை:
வட சென்னை பகுதியோ இதைவிடக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தண்டையார் பேட்டை, ரெட்டை குழி, நேதாஜி நகர், கருணாநிதி நகர், வைத்தி நகர், கண்ணன் தெரு, கொருக்குப்பேட்டை, எழில் நகர், வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், ராயபுரம், திருவொற்றியூர், காசிமேடு, எண்ணூர், வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், பெரம்பூர், திரு.வி.க.நகர், செம்பியம் ஆகிய பகுதிகள் வெள்ள நீரில் மிதக்கின்றன.
சாலைகள, வீடுகளில் வெள்ளம் தேங்கியிருப்பதால் மக்கள் மாடிகளுக்குக் குடி பெயர வேண்டிய நிலை உள்ளது.
வியாசர்பாடி ஜீவா ரயில் பாலம், பெரம்பூர் ரயில் பாலத்தில் வெள்ள நீர் புகுந்ததுவிட்டதால் அங்கு போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுவிட்டது. இங்கு மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் பம்புகள் மூலம் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவொற்றியூரில் ராஜாஜி நகர், கார்கில் நகர், கருணாநிதி நகர் ஆகிய இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் 200 குடும்பத்தினர் நகராட்சிப் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கனமழை காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் எந்த படகும் கடலுக்குள் செல்லவில்லை. இதனால் காசிமேடு மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.
மழையால் ஆட்டோக்களும் இயங்கவில்லை. ஓடும் ஆட்டோக்கள் 5 மடங்கு கட்டணம் கேட்டு பயணிகளை மேலும் சிரமத்தில் ஆழ்த்தி வருகின்றன.
பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மாணவ- மாணவிகள் அவதியில் இருந்து தப்பினர். சாலைகளில் வெள்ளம் தேங்கிக் கிடப்பதால் இரு சக்கர கனங்களை இயக்க முடியாமல் பெரும்பாலான அரசு, தனியார் நிறுவனங்களிலும் இன்று ஊழியர்கள் பணி்க்குச் செல்லவில்லை.
பல இடங்களில் மழை நீரில் கழிவு நீரும் கலந்து ஓடி நகரையே நாறடிதுக் கொண்டுள்ளது. கூவம் சாக்கடை ஓடும் பகுதிகளில் நிலைமை இன்னும் மோசம். அந்த கழிவு நீர் மழைநீரோடு கலந்து தெருக்களில் புகுந்து அந்தப் பகுதிகளையே நாற வைத்துள்ளது.
நேற்றிரவு மழை பெய்து கொண்டிருந்த போது சாலைகளில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பலர் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர். 2 சக்கர வாகனங்கள் ஆப் ஆகி நடுரோட்டில் நின்றதால் மழையில் ஏராளமானனோர் ரோட்டிலேயே தவித்தனர்.
நிவாரணப் பணிகள்-முதல்வர் உத்தரவு:
இந் நிலையில் முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த இரண்டு மூன்று நாட்களாக தமிழகத்தில் பெருமழை தொடர்ந்து பெய்து வருகின்ற காரணத்தினால் பல மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அந்த மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து பள்ளிகள் போன்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களுக்கு அரசின் சார்பில் உணவு வழங்க மாவட்ட அதிகாரிகள் மூலமாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்தந்த மாவட்ட அமைச்சர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் உடனடியாக வெள்ள நிவாரணப் பணிகளிலே ஈடுபட்டு, பெருமழை காரண மாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் நாளையதினம் நடை பெற உள்ள அமைச்சரவை கூட்டத்திலும் வெள்ள நிவாரண பணிகள் குறித்து ஆய்வு நடத்தி மேற்கொண்டு உதவிகள் செய்வது குறித்து அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications