தீவிரவாதிகளின் உடல்களை கடலில் எறியுங்கள்: முஸ்லீம்கள்
சமானா (ஹரியானா): மும்பைத் தீவிரவாததத் தாக்குதலில் ஈடுபட்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களை இந்தியாவில் எங்கும் அடக்கம் செய்யக் கூடாது. அவர்களின் உடல்களை கடலில் வீசி எறிய வேண்டும் என இஸ்லாமிய அறிஞர்கள் பலர் கூறியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் சமானா என்ற இடத்தில், இஸ்லாமிய அறிஞர்கள் மாநாடு நடந்தது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டவர்கள், மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமிய சட்டத்தின் படி தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இஸ்லாமில் வன்முறைக்கு இடமே இல்லை. அமைதியையும், உலக சகோதரத்துவத்தையும் மட்டுமே அது போதிக்கிறது என்றனர்.
மும்பையில் அப்பாவிகள் ரத்தம் சிந்தக் காரணமான தீவிரவாதிகளின் உடல்களை எங்கும் அடக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது. அவற்றை கடலில் தூக்கி எறிய வேண்டும் என்றும் கோபமாக கூறினர்.
உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த ஹைதர் ரஸா என்பவர் கூறுகையில், இஸ்லாமில் வன்முறைக்கோ, தீவிரவாதத்திற்கோ இடமில்லை.
கமாண்டோ படையினரால் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களை அடக்கம் செய்ய இடம் தர மாட்டோம் என மும்பை மயான நிர்வாகங்கள் கூறியிருப்பதை வரவேற்கிறேன். அவர்களை கடலில் வீசி மீன்களுக்கு இரையாக்க வேண்டும் என்றார்.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த குலாம் ரஸூல் நூர் கூறுகையில், தீவிரவாதிகள் உண்மையான முஸ்லீம்கள் அல்ல என்றார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த அலாமா ஹசன் சபார் நக்வி கூறுகையில், இந்தியா, பாகிஸ்தான் முன்னேறுவதை விரும்பாத 3வது சக்தியின் சதிதான் மும்பை தாக்குதல் சம்பவம் என்றார்.
முன்னதாக ஹரியானா மாநில ஆளுநர் ஏ.ஆர். கித்வாய் இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications