அதிமுக தான் வெல்லும்-அதை சின்ன குழந்தையும் சொல்லும்..ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் எப்போது வரும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கும், அதன் கூட்டணிக்கும் வெற்றி நிச்சயம் என்பது உறுதியாகிவிட்டது. அதிமுக சார்பில் யாரை நிறுத்தினாலும் வெற்றி பெறுவார்கள் என்று சின்ன குழந்தைகள் கூட சொல்லும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் இன்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மகன் திருமணத்தையும், மேலும் சில அதிமுக பிரமுகர்களின் இல்லத் திருமணங்களையும் நடத்தி வைத்து அவர் பேசுகையில்,

அனிதா ராதாகிருஷ்ணன் பேசும் போது, அவரது மகன்கள் 3 பேரின் திருமணத்தை நான் நடத்தி வைத்ததாகவும், அதுவே போதும் என்று மனநிறைவோடு கூறினார். அவரின் மகன்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் நானே திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர்களும் அதை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்.

மணமக்கள் இன்று இனிய இல்லறத்தில் அடியெடுத்து வைத்துள்ளனர். இது அவர்கள் வாழ்க்கையில் புதிய துவக்கமாக அமைவதுடன் திருப்புமுனையாகவும் அமையும்.நம்மைப் பொறுத்தவரை, மக்களைப் பொறுத்தவரை விரைவில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தல் அதிமுகவுக்கு மட்டுமன்றி, தமிழ்நாட்டுக்கு மட்டுமன்றி, இந்தியாவுக்கே ஒரு திருப்புமுனையாக அமையும்.

நாடு உனக்காக என்ன செய்தது என்று கேட்பதை விட நாட்டிற்காக நீ என்ன செய்தாய் என்று உன்னை நீயே கேட்டுக்கொள் என்றார் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி.

இதேபோல அதிமுகவினருக்கு இன்று நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்தக் கழகம் ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல, உங்கள் ஒவ்வொருவருடைய வாழ்விலும் அடையாளத்தையும், மக்கள் மத்தியில் செல்வாக்கையும், சமுதாயத்தில் நல்ல முகவரியையும் வாங்கித் தந்த இயக்கம்.

இன்று பல்வேறு நிலையில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த சிறப்புக்கும், உயர்வுக்கும் காரணம் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அதிமுக என்னும் பேரியக்கம்தான் என்பதை கண நேரமும் மறக்க கூடாது.

அதிமுகவினர் ஒவ்வொருவரும் தனது மனசாட்சியை தொட்டு கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கும், அதன் கூட்டணியின் வெற்றிக்கும் நாம் என்ன செய்யப் போகிறோம்? நம்முடைய பணி என்ன? நம்முடைய பங்களிப்பு என்ன? என்பதே அந்தக் கேள்விகளாகும்.

கட்சியின் உயர்வுக்காக கோடானு கோடி தொண்டர்கள் 1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். இதைத் தொடங்கிய காலத்தில் இருந்து பாடுபட்டு வருகிறார்கள். உங்களில் பலர் உழைப்பின் பலனை பெற்று விட்டீர்கள். அப்படிப்பட்டவைகள் கட்சிக்காக நன்றிக் கடன் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

உழைப்பின் பயனை அடையாதவர்கள், பதவி கிடைக்காதவர்கள் உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள்; அதற்கு உரிய பலன் தவறாமல் கிடைக்கும் என்று நான் உங்களுக்காக உத்தரவாதம் தருகிறேன்.

கட்சியில் உள்ள ஒன்றரை கோடி உறுப்பினர்களுக்கும் இப்போது ஒரே ஒரு சிந்தனை, லட்சியம் தான் இருக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களையும், அதன் கூட்டணியின் வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதே அந்த சிந்தனையாக, குறிக்கோளாக இருக்க வேண்டும்.

இதைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இருக்கக்கூடாது. நமக்குள் கருத்துவேறுபாடுகள், மாச்சரியங்கள் இருக்கவே கூடாது.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளால் மத்திய மற்றும் மாநில அரசுகள் மீது மக்கள் கடுமையான கோபத்திலும், அதிருப்தியிலும் உள்ளனர். இதனால் அவர்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

எனவே தேர்தல் எப்போது வரும் என்று அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கும், அதன் கூட்டணிக்கும் வெற்றி நிச்சயம் என்பது உறுதியாகிவிட்டது.

அதிமுக சார்பில் யாரை நிறுத்தினாலும் வெற்றி பெறுவார்கள் என்று யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள். சின்ன குழந்தைகள் கூட சொல்லும். பொதுமக்களும், ஊடகங்களும் இதைதான் சொல்கின்றனர்.

எனவே தேர்தலில் போட்டியிட கட்சிக்குள் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. அதில் தவறில்லை. ஆனால், அதற்காக நன்றாக செயல்படுபவர்கள் மீது புகார் தெரிவித்து தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி கட்சியில் பலவீனத்தை ஏற்படுத்தக்கூடாது.

அவர் எம்.பியாகி விடுவாரோ, இவர் எம்.பியாகி விடுவாரோ என்று ஒருவொருக்கொருவர் மற்றவர்களை பற்றி என்னிடம் புகார் சொல்ல நினைக்கிறார்கள். இதனால் தேவையில்லாத பிரச்சினை ஏற்படுகிறது.

இந்த இயக்கத்தில் தகுதி உள்ளவர்கள் ஏராளமானோர் இருக்கிறீர்கள். ஆனால் தொகுதிக்கு ஒருவருக்குத்தான் வாய்ப்பு கொடுக்க முடியும். கூட்டணி கட்சிகளுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். புதுச்சேரியை தவிர்த்து தமிழ்நாட்டில் 39 இடங்கள் இருக்கின்றன.

நமக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்துவிட்டு ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டால் தேர்தலில் நாம் வெற்றி பெறுவது நிச்சயம். தேர்தல் களத்தில் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுங்கள். யாரை வேட்பாளராக அறிவித்தாலும் 'அம்மா' நிற்கிறேன் என்ற உணர்வோடு பாடுபடுங்கள். வெற்றி ஒன்றே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+