குருவாயூர்: தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் விபத்தில் பலி
கோவை: குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் திருப்பூர் அருகே வாவிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்நாத் (34). தனியார் பனியன் ஏற்றுமதி கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
கோவை மாவட்டம் அனுப்பர் பாளையம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் உமா மகேஸ்வரி (30). பிரேம்நாத்தின் மனைவி இவர்.
இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மிதுல்ராம் என்ற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை மிதுல்ராமுக்கு முதன் முதலில் சோறூட்டும் நிகழ்ச்சிக்கு செல்ல குலதெய்வமான கேரள மாநிலம் குருவாயூர் கோயிலுக்கு உமா மகேஸ்வரி, அவரது கணவர் பிரேம்நாத், 8 மாத கைக்குழந்தை மிதுல்ராம், தாய் துளசி, மாமியார் நளினி, தங்கைகள் பானுபிரியா, ரேவதி ஆகியோர் இன்று அதிகாலை 1 மணியளவில் ஒரு குவாலிஸ் காரில் திருப்பூரிலிருந்து புறப்பட்டனர்.
அப்போது திருச்சூரிலிருந்து சேலம் நோக்கி வந்த லாரி ஒன்று கஞ்சிக்கோடு என்ற இடத்தில் குவாலிஸ் கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் குவாலிஸ் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
காரில் பயணம் செய்த உமா மகேஸ்வரி, பிரேம்நாத், குழந்தை மிதுல்ராம், துளசி, நளினி, பானுபிரியா மற்றும் கார் டிரைவர் ஆகிய 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த ரேவதி என்பவரை மீட்டு சிகிச்சைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து பாலக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர்கள் பழனிச்சாமி, மகேந்திரன், கிளீனர் பெருமாள் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.


Click it and Unblock the Notifications
