விஜயன் கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சென்னை: எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீஸார், சென்னை சைதாப்பேட்டை 23வது பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
நீதிபதி விஜயக்குமார் முன்னிலையில் சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். விரைவில் இதன் நகல் இந்த வழக்கில் கைதாகியுள்ள சுதாவின் தங்கை பானு, போலீஸ்காரர் கருணா என்கிற கருணாகரன் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும்.
கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி கோட்டூர்புரம் டர்ன்புல்ஸ் சாலையில் வைத்து விஜயன் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கை கடந்த 6 மாதங்களாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர். இதன் அடிப்படையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
50 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையில், 70 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏராளமான ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன
குற்றப்பத்திரிக்கையில் பானுவே இந்தக் கொலையை திட்டமிட்டு, கூலிப்படையை வைத்து நடத்தியதாக போலீஸார் குறிப்பிட்டுள்ள்ளனர்.
சொத்து தொடர்பாக பானுவும், விஜயனுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதையடுத்து விஜயனைத் தீர்த்துக் கட்ட தீர்மானித்துள்ளார் பானு. அதன்படி போலீஸ் கான்ஸ்டபிளான கருணா என்கிற கருணாகரனின் உதவியை அவர் நாடினார்.
கூலிப்படையினரை ஏற்பாடு செய்வதற்குத் தேவையான பணத்தையும் கருணாவிடம் அவர் கொடுத்துள்ளார்.
கருணா தொழிலமுறை கொலையாளிகளை ஏற்பாடு செய்துள்ளார். அவர்கள் விஜயனைத் தீர்த்துக் கட்டியுள்ளனர் என்று குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பானுவின் வங்கிக் கணக்கும் ஒரு ஆதாரமாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
முதலில் இந்த வழக்கை அபிராமபுரம் போலீஸார் விசாரித்து வந்தனர். ஜூன் 9ம் தேதி சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டது.
செப்டம்பர் 7ம் தேதிதான் வழக்கில் திருப்புமுனை ஏற்பட்டது. அன்றுதான் பானு, கருணா, கூலிப்படையைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் கார்த்திக், சாலமோன், தீனா, இன்னொரு கார்த்திக் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பானுவை முதன்மை குற்றவாளியாக போலீஸார் சேர்த்துள்ளனர்.
வழக்கில், விஜயனைக் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கருணாவுடன், பானு செல்போனில் பேசியது தொடர்பான ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை ஆதாரங்களாக போலீஸார் திரட்டியுள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் கைதாகியுள்ள அனைவரிடமும் எழுத்துப்பூர்வமாகவும் மற்றும் வீடியோ பதிவிலும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குற்றப்பத்திரிக்கையுன் சேர்த்து இவை அனைத்தும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications