ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு அசோக் கெலாட் தேர்வு
ஜெய்ப்பூர்: பலத்த போட்டிக்கு இடையே ராஜஸ்தான் சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டார்.
முதல்வர் பதவியை ஜாட் வகுப்பினருக்கே தர வேண்டும் என அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸ் மேலிடத்தை வற்புறுத்தி வந்தனர். இதனால் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 3 நாட்களாகியும் முதல்வர் யார் என்பதை தேர்வு செய்ய முடியாமல் இருந்து வந்தது காங்கிரஸ்.
ஜாட் வகுப்பைச் சேர்ந்த சிஸ்ராம் ஓலாவின் ஆதரவாளர்கள், கெலாட்டை முதல்வராக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் மேலிடமோ கெலாட்டையே முதல்வராக்க விரும்பியது.
இந்த நிலையில் நேற்று சட்டசபை காங்கிரஸ் தலைவரைத் தேர்வு செய்யும் கூட்டம் நடந்தது. கூட்டம் நடந்த இடத்திற்கு வெளியே ஓலா மற்றும் கெலாட் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர். இரு தரப்பினரும் மாறி மாறி கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மோதல் வெடித்து இருதரப்பினரும் அடிதடியில் இறங்கினர். போலீஸார் தலையிட்டு இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினர்.
இந்த நிலையில் சட்டசபை கட்சித் தலைவராக அசோக் கெலாட் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
57 வயதாகும் கெலாட் ஏற்கனவே முதல்வராக இருந்தவர்தான். ஒரு மனதாக அவர் தேர்வு செய்யப்பட்டதாக மேலிடப் பார்வையாளரான திக்விஜய் சிங் கூறினார். இந்தத் தேர்வை அங்கீகரிக்கும் பொறுப்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications