உயிர் போகும் வரை போராடுவேன்!-சீமான்

ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்தும், ராஜீவ் படுகொலையை விமர்சித்தும் பேசினார் என்ற காங்கிரசார் புகாரின் அடிப்படையில் அவர் கைதாகியுள்ளார்.
கைதாவதற்கு முன் இயக்குனர் சீமான் விகடன் குழுமத்துக்கு அளித்துள்ள பேட்டி:
''ராமேஸ்வரத்துல பேசினதுக்காக என்னைக் கைது செஞ்சாங்க. என்ன பேசினேன்னு இன்னும்கூட எவனுக்கும் தெரியல. இப்ப பேசினதுக்காக மறுபடி உள்ளே போட்டா, இன்னும் அதிகமாகத்தான் பேசுவேன். நான் என்ன பொம்பள கையைப் பிடிச்சு இழுத்தேனா? கோடி கோடியா மக்கள் பணத்தைக் கொள்ளையடிச்சேனா?.
தமிழ் இன விடுதலைக்காகப் போராடுறேன். அதுக்காக சிறையில போடுறாங்கன்னா, கோடி முறை சிறைக்கு செல்ல தயார். சாக பயந்தவன் தரித்திரம் ஆகிறான். சாகத் துணிஞ்சவன் சரித்திரம் ஆகிறான்.
அன்றைய கூட்டத்தில் நான் பேசினதைக் கேட்டு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பேர் கைதட்டினாங்களே... அவங்க மேல என்ன வழக்கு போடுவாங்க? சீமான் பேசுவதை நிறுத்தி விட்டான் என்றால் ஒண்ணு, தமிழ் ஈழம் அடைந்திருக்கவேண்டும்... இல்லை, இந்த சீமான் உயிர் போயிருக்கவேண்டும்.
மும்பை நகருக்குள்ள புகுந்த பயங்கரவாதிகளை அறுபது மணி நேரத்துல அழிச்சுட்டோம். இலங்கையில இருக்கிற விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள்னா அவங்களையும் அறுபது மணி நேரத்துல சிங்கள அரசால் அழிச்சிருக்க முடியும்தானே? இல்லை, ஆறு மாசத்துல அழிச்சிருக்கலாம்.
அட... ஆறு வருசத்துலயாவது அழிச்சிருக்கலாம். முப்பத்தாறு வருஷமா போராடிக்கிட்டு இருக்காங்களே. அப்ப அது தீவிரவாத இயக்கம் இல்லை. வலிமையான மக்கள் விடுதலைக்கான ராணுவம்னு உறுதியாகுதே!.
இத்தனை வருஷமா ஆயிரக்கணக்கில் ஈழத் தமிழர்களை படுகொலை செய்து கொண்டிருக்கிறார்களே... அமைதிப்படை என்ற பெயரில் இரண்டு லட்சம் பேரை அனுப்பினார்களே... அவர்கள் அப்பாவி தமிழர்களைத் தானே அழித்தார்கள். அது அமைதிப்படையில்லை, அநியாயப்படை! அவங்க செஞ்ச ஒரு நன்மையையாவது விரல் நீட்டிச் சொல்ல முடியுமா?.
உலகிலேயே பிரபாகரன் போன்ற இன்னொரு வீரன் இல்லை. அதனால்தான், இந்த வீரனை விட்டுவைத்தால் உலகத்திலேயே வலிமை மிக்க ராணுவத்தை ஏற்படுத்தி விடுவான் என்று பயப்படுகின்றனர். அண்டை தேசத்துல நம் சகோதரர்கள் படுறபாட்டைப் பத்தி பேசறதை தடுக்கற நாடு, என்ன ஜனநாயக நாடு?.
இலங்கையில எல்லா சித்ரவதைகளும் ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில்தான் நடைபெறுகிறது. புலிகள் வசமிருக்கும் பகுதிகளை மீட்டெடுத்து, அங்கிருக்கற மக்களை வாழவைக்கப் போவதா ராஜபக்ஷே சொல்லிக்கிட்டு இருக்கானே... எல்லாரையும் கொன்னுட்டு பிணங்களையாடா வாழவைக்கப் போற?''
''நீங்கள் விடுதலைப் புலி அமைப்பிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களை ஆதரித்துப் பேசுவதாக சுப்ரமணியன் சுவாமி போன்றோர் சொல்கிறார்களே?''
''அவர்கள் எப்படி ராஜபக்ஷேவிடம் பெட்டி பெட்டியாக பணம் வாங்கிக்கொண்டு விடுதலைப் புலிகளை எதிர்த்துப் பேசுகிறார்களோ... அதேபோல், நானும் விடுதலைப் புலிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களை ஆதரித்துப் பேசுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!. இந்த அவதூறெல்லாம் என்னை முடக்கிவிடாது!'' என்று கூறியுள்ளார் சீமான்.
பச்சை துரோகம்-வைகோ:
இதற்கிடையே சீமானின் கைதுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை தீவில் ஈழத்தமிழ் இனத்தையே அழிக்க சிங்கள அரசு நடத்துகின்ற ராணுவத் தாக்குதலுக்கு முழு அளவில் இந்திய அரசு உதவி வருகிறது. இது மன்னிக்க முடியாத பச்சை துரோகம். 1987ம் ஆண்டில் அன்றைய காங்கிரஸ் அரசு போபர்ஸ் பீரங்கி ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிப்பதற்காக, மக்கள் கவனத்தை திசை திருப்ப, இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேயோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு, அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி, தமிழர்களின் உரிமை வாழ்வை அழிக்கும் தாக்குதலில் ஈடுபட்டது.
இந்த துரோகங்களை மக்கள் மன்றத்தில் கூறியதற்காக திரைப்பட இயக்குநர் சீமான் மீது வசைபாடுகிற காட்டுக்கூச்சலை காங்கிரஸ் எழுப்பி உள்ளது.
மும்பையிலே நடைபெற்ற கொடூரமான படுகொலைகளுக்குத் தளம் அமைத்து தந்த பாகிஸ்தானோடு போர் புரியவும் தயார் என்று ஓங்கிக் குரல் கொடுக்கும் இந்திய அரசு, அதே பாகிஸ்தான் கப்பல் கப்பலாக சிங்கள அரசுக்கு ஆயுதம் கொடுக்கும் நிலையில், தானும் தமிழர்களை அழிக்க ஆயுத உதவி செய்யும் அக்கிரமத்தில் ஈடுபட்டு உள்ளது.
நேற்று முன்தினம் இலங்கையில் சிங்கள ராணுவத் தளத்திற்கு சென்று, அந்த ராணுவத் தளபதிகளுக்கு யுத்தம் குறித்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளோடு கரம் கோர்த்துக் கொண்டு இந்திய ராணுவ அதிகாரிகளும் ஆலோசனைகளை வழங்கி உள்ள துரோகத்தில் இந்திய அரசு ஈடுபட்டு உள்ளது சகிக்க முடியாத கொடுமை ஆகும்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகள் ஈழத்தமிழருக்கு ஆதரவு கொடுக்கும் இயக்குநர் சீமானை அச்சுறுத்த எண்ணி, அவர் படப்பிடிப்புக்குச் சென்று இருந்த நேரத்தில், அவரது காரைத் தீயிட்டுக் கொளுத்தி உள்ளனர். இந்த அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த வன்முறையில் ஈடுபட்ட ரவுடிகளை, போலீஸ் துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். இப்படிப்பட்ட வன்முறைகளின் மூலம் ஈழ ஆதரவுக் குரலை காங்கிரஸ் ஒடுக்கிவிட முடியாது; அது மேலும் வீறுகொண்டு எழும் என எச்சரிக்கிறேன். சீமானின் கைதுக்கு மதிமுக தனது பலத்த கண்டனத்தை தெரிவிக்கிறது என்று கூறியுள்ளார் வைகோ.
பழ.நெடுமாறன் கண்டனம்:
தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திரைப்பட இயக்குநர் சீமானின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை காங்கிரசை சேர்ந்த சிலர் கொளுத்தியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். ஜனநாயக வழிமுறைகளில் நம்பிக்கையில்லாமல் பாசிச வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட காங்கிரஸ்காரர்களை கைது செய்யாமல் சீமான், கொளத்தூர் மணி, பெ.மணியரசன் ஆகியோரை கைது செய்துள்ள தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, சீமானை கைது செய்ய வேண்டுமென வெளியிட்ட அறிக்கைக்குப் பணிந்து தமிழக அரசு செயல்பட்டு இருக்கிறது. மூவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன் காரைக் கொளுத்திய காங்கிரஸ்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்துகின்றேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications