சென்னை அமெரிக்க துணைத் தூதரகம் மீது செருப்பு வீச்சு
சென்னை: சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக அலுவலகம் மீது செருப்பை வீசியதாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். குடிபோதையில் அவ்வாறு அவர் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
பாக்தாத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது பத்திரிக்கையாளர் ஒருவர் ஷூ வீசிய சம்பவமே இன்னும் மறக்கவில்லை.
இந்த நிலையில் அமெரிக்க துணைத் தூதரக அலுவலகம் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் சென்னை போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சனிக்கிழமை நள்ளிரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.
மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் அமெரிக்க தூதரகம் உள் ளிட்ட முக்கிய இடங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமையன்று நள்ளிரவில் வாலிபர் ஒருவர் தனது செருப்பை கழற்றி அமெரிக்க தூதரகம் நோக்கி வீசியுள்ளார்.
கதீட்ரல் சாலையில் அமெரிக்க துணைத் தூதரகம் உள்ளது. இங்கு சனிக்கிழமை நள்ளிரவில் வந்த 32 வயது அப்துல் ரஹ்மான் என்ற நபர், தனது செருப்பைக் கழற்றி, தூதரக கேட் மீது வீசினார்.
இதையடுத்து அங்கிருந்த பாதுகாப்புப் போலீஸார் அவரைப் பிடிக்க ஓடினர். ஆனால் அவர் தான் வந்த பைக்கில் ஏறி தப்பி விட்டார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் மீண்டும் வந்தார். அதைப் பார்த்த போலீஸார், இந்த முறை வேகமாக செயல்பட்டு அவரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அவர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. அப்துல் ரஹ்மான் புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர்.
ரஹ்மான் திருமணமாகாதவர். அச்சகம் ஒன்றில் புரோக்கராக செயல்பட்டு வந்தார். பெல்ஸ் சாலையில் உள்ள மதுக் கடையில் குடித்த அவர் போதையுடன் நகர் முழுவதும் பைக்கிலேயே சுற்றியுள்ளார்.
அவரது தந்தை முகம்மது மீரான், தோல் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். அவரது சகோதரி திருமணமாகி சிவகங்கையில் வசித்து வருகிறார்.
குடிபோதையில்தான் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார் ரஹ்மான். அவரிடம் வேறு நோக்கமோ, அவருக்குக் குற்றப் பின்னணியோ இல்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே அவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டி, கலாட்டா செய்ததாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications