திருமங்கலம் இடைத்தேர்தல்-தொகுதி ரவுண்ட் அப்!

மதுரை: இடைத்தேர்தல் என்றாலே அது மதுரை தான் என்றாகிவிட்டது. முதலில் மதுரை மத்திய தொகுதியில் பி.டி.ஆர் .பழனிவேல்ராஜன் மறைவையொட்டி இடைத் தேர்தல். அடுத்து மதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சண்முகம் மறைவையொட்டி இடைத் தேர்தல். தற்போது திருமங்கலம் தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. வீர.இளவரசன் மறைவையொட்டி இடைத் தேர்தல்.
கடந்த காலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் திமுகவோடு, அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் போன்ற கூட்டணி கட்சிகளோடு அழகிரி தலைமையில் திமுக இடைத் தேர்தலை சந்தித்தது.
ஆனால் தற்போது நிலைமையே வேறு. இம் முறை திமுக கூட்டணியை விட்டு பாமக, மார்க்சி்ஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் வெளியேறிவிட்ட நிலையில் திமுக இடைத் தேர்தலை சந்திக்கிறது.
அதிமுகவை பொறுத்தவரை கடந்த காலங்களில் தோல்வி முகமே. தற்போது கூட்டணியில், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்துள்ளன. மேலும் மதிமுக, அகில இந்திய மூவேந்தர் முன்னணி, மூவேந்தர் முன்னணி, போன்ற கட்சிகளும் உடன் உள்ளன.
விலைவாசி உயர்வு, மின் தடை ஆகிய விவகாரங்களைத் தான் முக்கியமாக கையில் எடுத்துள்ளது அதிமுக.
திருமங்கலத்தைப் பொறுத்தவரை அது கிராமங்கள் நிறைந்த தொகுதி. 86 பஞ்சாயத்துக்கள், 108 வருவாய் கிராமங்கள் உள்பட 242 பெரிய-சிறிய கிராமங்கள், திருமங்கலம் நகராட்சி என சுமார் 50 கி.மீ. சுற்றளவு கொண்டது. இதில் வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம்.
இத் தொகுதியில் பெரும்பான்மையானோர் முக்குலத்தோர் தான். அடுத்தபடியாக தெலுங்கு நாயுடு, நாயக்கர்கள், தலித் சமூகத்தினர் உள்ளனர். இவர்கள் தவிர முஸ்லீம்கள், நாடார்கள், முத்திரையர், ரெட்டியார் சமூக மக்களும் கணிசமாக உள்ளனர்.
கடந்த காலங்களில் இந்தத் தொகுதியில் தேர்தலில் வெற்றிக் கனியை பறித்த காங்கிரஸ் எம்.பி. சித்தன், (அ)திமுக முத்துராமலிங்கம், திமுக அதியமான் (லேட்), முன்னாள் சபாநயாகர் காளிமுத்து (லேட்), மதிமுக வீர. இளவரசன் (லேட்) போன்ற அனைவருமே முக்குலத்தோர் தான்.
தற்போது அதிமுக தரப்பில் களம் இறங்கிய முத்துராமலிங்கம் தான், தா.கி. கொலை வழக்கை கையில் எடுத்து தமிழக முதல்வர் மகன் மு.க. அழகிரி, துணை மேயர் மன்னன், எஸ்.ஆர்.கோபி போன்றவர்களை நீதிமன்ற படியேற வைத்தவர்.
இதனால் அவரையே வேட்பாளராக்கியுள்ளார் ஜெயலலிதா.
கடந்த 2006 தேர்தலில் திமுக, மதிமுக, தேமுதிக, மூமுக, ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுக சார்பில் போட்டியிட்ட வேலுச்சாமி 4,144 ஓட்டு வித்தியாசத்தில் மதிமுக வீர. இளவரசனிடம் வெற்றி வாய்ப்பை பறி கொடுத்தார்.
இந்த நிலையில் அவரிடம் இருந்த திமுக மாவட்டச் செயலாலர் பதவியையும் பறிக்கப்பட்டது. இதனால் இவரது ஆதரவாளர்கள் சோர்ந்து போயுள்ளனர்.
தேசிய தேர்தலில் தமிழகத்தில் வலுவான கூட்டணி மலருமா என ஏங்கிக் கொண்டிருந்த பாஜகவிற்கு இடைத் தேர்தல் கசப்பு மருந்தாக அமைந்துவிட்டது. காரணம், பாஜக தனித்து நின்றால் அதன் ஓட்டு வங்கி 'நிலவரம்' வெளியே தெரிந்து அசிங்கமாகி விடும் என்பதால் தேர்தலிலேயே போட்டியிடாமல் ஒதுங்கிவிட்டது. போட்டியிடாததால் கட்சிக்கு நஷ்டம் குறைவு என்கின்றனர் அக் கட்சியினர்.
கடந்த தேர்தலில் தேமுதிக சார்பில் நின்ற தனபாண்டியன் சுமார் 19,970 ஓட்டுக்களை பெற்றார். இம்முறையும் இவரையே நிறுத்தி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளார் விஜய்காந்த். விஜயகாந்த்தும் மதுரையில் முகாமிட்டு பணியாற்ற உள்ளாராம்.
எப்படியும் திமுக தலைமை கடைசி நேரத்தில் மு.க. அழகிரியின் 'நம்பிக்கை நட்சத்திரம்' எஸ்.ஆ.கோபியை வேட்பாளராக அறிவிக்கும் என பலரும் காத்திருந்த வேளையில் லதா அதியமான் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வெங்கடேச பண்ணையார் மறைவை ஒட்டி அவரது மனைவி ராதிகா செல்வி களம் இறக்கப்பட்டதால் அவருக்கு அனுதாப ஓட்டுக்கள் விழுந்தது. அதே ஸ்டைலில் லதா அதியமான் இறக்கப்பட்டுள்ளார்.
மேலும் பெண் வேட்பாளர் என்பதால் பெண்கள் ஓட்டு கூடுதலாக கிடைக்கும் என திமுக தலைமை கணக்கு போடுகிறது. வேட்பாளர் பற்றி கமெண்ட்ஸ்க்கு இடம் தராமல் திமுக தலைமை மிகவும் தீவிரமாக அலசி ஆராய்ந்தி தான் லதா அதியமானை வேட்பாளராக்கியது.
காரணம், எஸ்.ஆர். கோபி, தா.கி. கொலை வழக்கு விவகாரத்தில் சிக்கி, விடுதலையானாலும், அவர் வேட்பாளராக களம் இறங்கினால் தா.கி. சார்ந்த முக்குலத்தோர் சமூக வாக்குகள் (கோபியும் அதே சமூகத்தவர் என்றாலும்) எவ்வளவு தூரம் திமுகவுக்கு விழும் என்பதில் சந்தேகம் நிலவியதால் தான் அவரது பெயர் தவிர்க்கப்பட்டது என்கின்றனர்.
ஏற்கனவே இரண்டு இடைத் தேர்தலில்களில் வெற்றியை பெற்றுத் தந்த மு.க. அழகிரி இம் முறையும் வெற்றியை பறித்து கொடுத்துவிட்டால் அவர் ஹாட்ரிக் சாதனை படைத்துவிடுவார். அதன் மூலம் திமுகவில் முக்கிய பொறுப்பு அவரை தேடி வரும் என உடன் பிறப்புக்கள் உற்சாகம் பொங்க கூறுகின்றனர்.
கடந்த கால இடைத் தேர்தல்களில் படு உற்சாகம் காட்டிய மு.க. அழகிரி இம் முறை எப்படி செயல்பட போகிறார் என்பதே பலரின் எதிர்பார்ப்பு. அவர் தீவிரமாக களமிறங்கினால் திமுகவுக்கு பாதி கிணறு தாண்டியதைப் போல. இதனால் அவரை சமாதானப்படுத்துவதில் திமுக தீவிரமாக உள்ளது.
தொகுதியில் உள்ள நாடார் சமூக ஓட்டை நம்பி சரத்குமாரின் அ.இ.ம.க வரிந்து கட்டி களமிறங்கியுள்ளது.
இப்போதைக்கு போட்டி என்னவோ அதிமுக, திமுக, தேமுதிக இடையே தான்.












Click it and Unblock the Notifications